திருச்சி மெயின் கார்டு கேட், தெப்பக்குளம், என்.எஸ்.பி. ரோடு, நந்தி கோயில் தெரு, பெரியகடைவீதி, சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் இரண்டாயிரம் நடைபாதை கடைகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது இந்த நடைபாதைக் கடைகள் அமைந்துள்ள பகுதிகள் அனைத்தும் திருச்சி மாநகராட்சி சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டியால் வியாபாரிகளின் பிழைப்பில் துண்டு! - திருச்சி
திருச்சி: மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நடைபாதை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக நடைபாதைக் கடைகளை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுவருகிறது. ஆனால், இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தடையை மீறி கடைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டிக்கும் வகையில் 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இன்று திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வியாபாரிகள் அனைவரும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனயடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுடன் மாநகராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு திரும்பிச் சென்றனர். மாநகராட்சி அலுவலகத்தை நடைபாதை வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.