திருச்சி:கூட்டுறவுத்துறை சார்பாக 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா திருச்சியில் நடைபெற்றது. இதில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கான பரிசுகள், பாராட்டு கேடயங்கள், மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் பயிர்க்கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், மத்திய காலக்கடன், என 1365 பயனாளிகளுக்கு 8.90 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.என்.நேரு, ”தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு அலுவலர்களும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். நகராட்சி நிர்வாகத்துறையும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம்.
சென்னையில் இரண்டு இடங்களில் மட்டுமே தேங்கிய மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தி விட்டோம். வருங்காலத்தில் அங்கும் மழையால் பாதிக்கப்படாத வகையில் கால்வாய் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனைத்து இடங்களிலும் தற்காப்பு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
விவசாய பணிகளுக்கு யூரியா கிடைக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். அது குறித்து முதலமைச்சரிடமும், துறை அமைச்சரிடமும் பேசி உள்ளேன். விரைவாக யூரியா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு சங்கங்களில் பழைய நிலையிலேயே கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அவுட்சோர்சிங் முறையில் மாநகராட்சி பணிகள் நிரப்புவது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் திருச்சி காவேரி பால பராமரிப்பு பணிகள் இன்னும் 2 மாதத்தில் நிறைவடையும். மாநகராட்சி அடிப்படை பணிகளுக்கு அவுட்சோர்சிங் முறையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதால் அந்த அரசாணையை மறுபரீசிலனை செய்வது குறித்து முதலமைச்சரிடம் பேசியபின் முடிவு செய்யப்படும். அடிப்படை பணிகள் முதல் அனைத்து பணியிடங்களும் அரசு பணிகளாகவே நிரப்ப முயற்சி செய்து வருகிறோம்.
இதையும் படிங்க: ரூ.74 லட்சம் மோசடி.. ஊராட்சி மன்ற தலைவர் பதவிநீக்கம்!