தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணப்பாறை அருகே பாஜக நிர்வாகி மீது தாக்குதல்.. அதிமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாக காவல்துறை மீது புகார்!

மணப்பாறை அருகே அனுமதியின்றி மண் கொட்டிய விவகாரத்தில் பாஜக நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய அதிமுக நிர்வாகிகள், மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளதோடு, தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 13, 2023, 11:24 AM IST

Updated : Aug 13, 2023, 2:28 PM IST

ஆண்டிவேல் மருமகன் தட்சிணாமூர்த்தி

திருச்சி:மணப்பாறை அடுத்த கருப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட செவக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டிவேல். அதே ஊரில் செங்கல் சூளை வைத்து நடத்தி வரும் பிச்சை (அதிமுக நிர்வாகி) என்பவர் ஜேசிபி மற்றும் கனரக வாகனங்களை பயன்படுத்தி கருப்பூர் பெரிய குளத்தில் மண் எடுத்து வந்துள்ளார். அந்த மண்ணை ஆண்டிவேல் நிலத்தில் கொட்டியுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஆண்டிவேல் குடும்பத்தினர். இதுகுறித்து கருப்பூர் ஊராட்சி மன்ற தலைவரிடம் நேரில் அணுகி விளக்கம் கேட்டுள்ளனர்.

அப்போது ஆண்டிவேல் பெயரில் உரிய அனுமதி பெற்றதற்கான ஆதாரத்தை ஊராட்சி மன்ற தலைவர் காட்டியுள்ளார். இதனால் மேலும் அதிர்ச்சிக்குள்ளான அவர்கள் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் உள்ளிட்ட அனைவரிடமும் நாங்கள் ஏதும் கருப்பூர் குளத்தில் மண் அள்ளிக்கொள்வது சம்பந்தமாக அனுமதி கேட்காத நிலையில் ஆண்டிவேல் பெயரில் பிச்சை என்பவருக்கு எப்படி அனுமதி தந்தீர்கள் என்றும் அனுமதி கோரிய விண்ணப்ப பத்திரத்தில் கை நாட்டு வைக்க தெரிந்த அவருக்கு ஆண்டிவேல் என்று அவரது கையெழுத்து இடம் பெற்றது எப்படி? என்பதும் குறித்து விளக்கம் கேட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அறிந்த பிச்சை தரப்பினர் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் ஆண்டிவேல் பேரன் ராஜேஷ் குமார் (பாஜக) ஆகஸ்ட் 9-ஆம் தேதி மாலை வீட்டிற்குச் செல்லும் வழியில் வழிமறித்து கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவ்வழியே சென்ற ராஜேஷ்குமார் நண்பர்களையும் தாக்கியுள்ளனர். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து ஆண்டிவேல் தனது பேரன் மீது தாக்குதல் நடத்திய செங்கல் சூளை உரிமையாளர் பிச்சை, அவரது மகன் உள்பட 30 பேர் மீதும், தனது பெயரில் போலி அனுமதி அளித்த மணப்பாறை வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் மீதும் புத்தாநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரை பெற்றுக் கொண்ட புத்தாநத்தம் காவல் உதவி ஆய்வாளர் மார்நாடு வழக்குப்பதிவு செய்ய மறுத்து புகார் மனுவை மட்டும் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்ய மறுத்த புத்தாநத்தம் காவல் உதவி ஆய்வாளரை கண்டித்தும், போலி அனுமதி அளித்த மணப்பாறை வட்டாட்சியர் பதவி நீக்கம் செய்ய சமூக வலைதளம் மூலம் வலியுறுத்தி வருகின்றனர்.இதுகுறித்து ஆண்டிவேல் மருமகன் தட்சிணாமூர்த்தி கூறுகையில், "எனது மாமனாருக்கு சொந்தமான நிலத்தில் கனரக வாகனங்கள் மூலம் மண் கொட்டப்பட்டது. எங்கிருந்து? யார், கொண்டு வந்து கொட்டினார்கள்? என்பது குறித்த விளக்கம் கேட்டபோது பிச்சை என்பவர் எனது மாமனார் ஆண்டிவேல் பெயரில் போலி அனுமதி பெற்று கருப்பூர் குளத்தில் இருந்து மண் எடுத்து வந்து கொட்டியது தெரியவந்தது.

இதுகுறித்து கேட்ட எனது மகன் ராஜேஷ் மீது பிச்சை தரப்பைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் பிளேடு, கத்தி, உருட்டு கட்டைகளை கொண்டு கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். எனது மகன் சிகிச்சையில் இருந்து வரும் நிலையில் வட்டாட்சியர் மற்றும் பிச்சை தரப்பு மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். புகார் மீது புத்தாநத்தம் காவல் உதவி ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்ய மறுத்து, புகார் மனு மட்டும் வழங்கி உள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சர் தனது நேரடி கட்டுப்பாட்டில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

இச்சம்பவம் தொடர்பாக இந்த சம்பவம் குறித்து மணப்பாறை டிஎஸ்பி ராமநாதனை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, "இது குறித்து சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளரிடம் கேட்டு தகவலை பெற்றுக் கொள்ளுங்கள்" எனக் கூறினார். பின்னர் சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது அவர் அழைப்பை ஏற்கவில்லை. வேண்டுமென்றே இந்த விவகாரம் தொடர்பான செல்போன் அழைப்புகளை உதவி ஆய்வாளர் தவிர்த்து வருவதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க:தாய்ப்பால் கொடுத்ததை வீடியோ எடுத்த முதியவர் - கொலை செய்து கால்வாயில் வீசிய கும்பல்

Last Updated : Aug 13, 2023, 2:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details