திருச்சி: துறையூர் அடுத்த உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ஆங்கியம் கிராமம். இந்த கிராமத்தில் கரடு காட்டுப்பகுதி உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த ஹரிபாஸ்கர் என்பவர் ஒரு குகை முன்பு நின்று செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக குகைக்குள் இருந்த சிறுத்தை சீறி பாய்ந்து அவரை தாக்கியது.
இதை அருகில் இருந்த விவசாயி பெரியசாமி என்பவர் பார்த்து ஹரி பாஸ்கரை காப்பாற்ற முயன்றார். அப்போது சிறுத்தை இருவரையும் தாக்கிவிட்டு தப்பி ஓடியது. காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
திருச்சி மாவட்ட வனப்பகுதிகளில் இதுவரை சிறுத்தை நடமாட்டம் இல்லாமல் இருந்தது. தற்போது முதன்முறையாக சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து வனத்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தில் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.