திருச்சி அப்பல்லோ மருத்துவமனை சிறுநீரக மருத்துவர் அழகப்பன் சொக்கலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திருச்சியைச் சேர்ந்த 54 வயது பெண் ஒருவர் புறநோயாளியாக உடல் பரிசோதனைக்கு வந்தார். அவரை பரிசோதித்தபோது அபாயகரமான மற்றும் அரிய வகையிலான சிறுநீரக புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதை அந்த நோயாளி உணரவே இல்லை. உதாரணமாக ஒரு டென்னிஸ் பந்து அளவுக்கு சிறுநீரகத்தில் அந்த புற்றுநோய் கட்டி உருவாகியிருந்தது. இதனால், அவருக்கு எவ்வித அறிகுறியும், தொந்தரவும் இல்லை.
பொதுவாக இந்தப் புற்றுநோய் கட்டி உடலில் மிகப்பெரிய ரத்தநாளமான "இன்பிரியர் வேனா காவா"வில் சென்று மேல்நோக்கி பரவி இதயத்தையும் சென்றடைந்து விடும். இதைத் தொடர்ந்து இதயம் மூலம் மூளைக்கும் ஒரு அச்சுறுத்தலாக ஏற்பட்டு நுரையீரலையும் பாதித்து அந்தப் பெண்ணுக்கு உயிர் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய தன்மை கொண்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த புற்றுநோய் கட்டி இதயத்தை சென்றடையவில்லை. இத்தகைய நோய்க்கு நாட்டிலேயே ஒரு சில நகரங்களில் மட்டுமே சிகிச்சையளிக்கப்படுகிறது.
அந்த வகையில் அரிதான இந்த சிகிச்சைக்கான வசதி திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் உள்ளது. அதற்கேற்ற மருத்துவக் குழுவினரும் இங்கு உள்ளனர். அதனால், இந்த சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அந்தப்பெண்ணின் சிறுநீரகத்தில் இருந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டுள்ளது. வழக்கமாக ஏற்படும் ரத்த இழப்பு கூட இந்த அறுவை சிகிச்சையில் ஏற்படவில்லை. இவருக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு சிறுநீரகத்தில் ஏற்படும் புற்றுநோயின் நான்காம் நிலையாகும்.
இந்த நோய் தீவிரம் அடைந்தால் உடலிலுள்ள பல உறுப்புகள் பாதிப்படைந்து உயிரிழப்பு ஏற்படும். இவருக்கு ஏற்பட்டிருந்த பாதிப்பு ஆபத்தான நிலையில் இல்லை. சிகிச்சையளித்து குணப்படுத்தக் கூடிய நிலையில் தான் இருந்தது. ஆனால், ஒரு டைம் பாம் போல் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்ற நிலையில் புற்றுநோய் கட்டி இருந்தது. அது நடந்திருந்தால் அந்த பெண்ணின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும். திருச்சி அப்போலோ மருத்துவமனையில் மேற்கொண்ட வெற்றிகரமான இந்த அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து மூன்றே நாள்களில் அந்தப் பெண் நோயாளி வென்டிலேட்டர்லிருந்து விலக்கப்பட்டார்.