திருச்சி: இந்தித் திணிப்புக்கு எதிராக ஒற்றை ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்ட மாற்றணிக்காக என்கிற மையக்கருத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPIM) அமைப்பின் பொது மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆளுநர் பதவி விலக வேண்டும், இந்தி திணிப்புக்கு எதிராக மொழி சமத்துவத்திற்கு எதிராக போராட வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில் சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சிபிஐ செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் தொல் திருமாவளவன், மமக பொதுச்செயலாளர் அப்துல் சமது, மக்கள் அதிகாரம் அமைப்பின் பொதுச்செயலாளர் ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், “சனாதன பாசிசத்தை எதிர்த்து அனைத்து முற்போக்கு சக்திகளை ஒன்றிணைப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. மாற்று அணி தமிழ்நாட்டில் மட்டுமன்றி இந்திய அளவில் தேவைப்படுகிறது. சனாதன பாஸிசத்தை வீழ்த்த நம்மை ஒன்றிணைத்ததற்கு பாஸிசவாதிகளுக்கு தான் நன்றி கூற வேண்டும்.
இஸ்லாமிய அமைப்புகளை மதவாத அமைப்புகளாக பார்த்தவர்கள் இன்று பாசிஸத்யை வீழ்த்த அவர்களையும் ஒன்றிணைத்திருப்பது முற்போக்கான அரசியல் நகர்வு. இஸ்லாமிய சமூகத்தையும், பெரியாரிய, அம்பேத்கரிய அமைப்புகளை பிற்போக்கு சக்திகளாக புறந்தள்ளி விட முடியாது.