திருச்சி:புகழ் பெற்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில், கடந்த டிச.22ஆம் தேதி முதல் வைகுண்ட ஏகாதசி பெருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ராப்பத்து திருவிழாவின் முதல் நாளில் சொர்க்கவாசல் திறப்பு கடந்த 2ஆம் தேதி நடைபெற்றது.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் மட்டுமே நிகழ்த்தப்படும் திருக்கைத்தல சேவை இதனையடுத்து நம்மாழ்வாருக்கு காட்சியளிக்கும்பொருட்டு, நம்பெருமாள் நின்ற கோலத்தில் காட்சியளித்தை உணர்த்தும் வகையில், வருடத்திற்கு ஒரு முறை ஸ்ரீரங்கத்தில் மட்டுமே நடைபெறும் திருக்கைத்தல சேவை, ராப்பத்து திருவிழாவின் 7ஆம் நாளான நேற்று (ஜன.8) நடைபெற்றது.
இதில் உற்சவர் நம்பெருமாள், முத்துப்பாண்டியன் கொண்டை, நீலநாயகம், அடுக்கு பதக்கம், காசு மாலை ஆகியவை அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு பரமபதவாசல் வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளினார். பின்னர் மாலை 5.45 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தை நம்பெருமாள் அடைந்தார். தொடர்ந்து நம்பெருமாள் திருக்கைத்தல சேவை மாலை 6 மணிக்கு தொடங்கியது.
நம்மாழ்வார் பராங்குச நாயகி திருக்கோலத்தில் எழுந்தருள, திருமாமணி மண்டபத்தில் நம்பெருமாளை கோயில் பட்டர்கள் தங்களது கைகளில் ஏந்தியபடி நம்மாழ்வாருக்கும், பக்தர்களுக்கும் சேவை சாதிக்க செய்தனர். இந்த திருக்கைத்தல சேவை சுமார் 15 நிமிடங்கள் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க:திருச்செந்தூர் கோயிலில் குவியும் பக்தர்கள் - பல்லாயிரக்கணக்கானோர் சாமி தரிசனம்!