சுகாதாரமற்ற கடைகளுக்கு அடுத்தடுத்த சீல் வைத்த அதிகாரிகள் திருச்சி: திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே 30 வருடமாகப் பிரபல தனியார் ஐஸ்கிரீம் கடை இயங்கி வருகிறது. இந்த நிலையில் ஐஸ்கிரீம் கடையில் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் இருப்பதாகவும் உணவுப் பொருட்கள் சீரற்ற முறையில் பராமரிக்கப்படுவதாகவும் பொது மக்களிடம் இருந்து உணவு பாதுகாப்புத் துறையினருக்குப் புகார் வந்ததுள்ளது.
இதனையடுத்து உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் திருச்சி மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு தலைமையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடைக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உணவு தயாரிக்கும் இடத்தை ஆய்வு செய்ததில் அந்த இடம் மிகவும் அசுத்தமாகவும், சீரற்ற முறையிலும் எலிகள், கரப்பான்பூச்சி, பல்லிகள் எனச் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததனைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் இது குறித்துக் கடை உரிமையாளருக்கும் ஊழியர்களையும் எச்சரித்த உணவு பாதுகாப்புத் துறையினர் அந்த இரண்டு உணவு கூடத்திற்கும் சீல் வைத்து, அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த உணவு விற்பனையைத் தற்காலிகமாகத் தடை செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, திருச்சி மேலப்புலி வார்டு பகுதியில் இயங்கி வரும் பிரபல ஜவுளிக்கடையின் உள்ளே இயங்கி வரும் உணவகத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு பர்கரில் எலி எச்சம் இருந்ததாக பொது மக்களிடம் இருந்து புகார் வந்துள்ளது. புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், உணவில் எலி எச்சம் இருந்ததனை உறுதிப்படுத்தி மேலும் அந்த இடம் சுத்தம் செய்ததால் எலிகள் அதிகம் ஊடுருவுவதையும் கண்டறிந்துள்ளனர். தற்பொழுது அந்த உணவகத்திற்கும் உணவு துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த இரண்டு கடைகளுக்கும் அங்குள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வண்ணம் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் பிரிவு 55-இன் கீழ் இரு கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அந்த குறைகளை நிவர்த்தி செய்த பின்னரே உணவு விற்பனை தொடங்கப்பட வேண்டும் என்று உத்தரவும், சட்ட பூர்வ உணவு மாதிரியும், அபராத தொகையும் உணவு பாதுகாப்புத் துறை விதித்துள்ளது. முன்னதாக சோதனையின் போது தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இல்லாமல் இருந்த உணவுப் பொருட்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைக்கோட்டை நந்தி கோயில் அருகில் உள்ள பிரபல டீ கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. நியமன அலுவலர் உத்தரவின் பேரில் டீ கடைக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட புகையிலையின் விற்பனை அதிகரித்துள்ளதால், அதன் பயன்பாட்டைத் தடுக்கும் விதத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனையில் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இதையும் படிங்க:சூரத்தில் ஒரு 'தங்கல்' - டீ வியாபாரியின் 3 மகள்கள் தேசிய சாதனை!