திருச்சி ரசிகர்கள் கொண்டாட்டம் திருச்சி: திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்கள் பண்டிகை காலங்களில் வெளியாவது வழக்கம். மற்ற சாதாரண நாட்களில் வெளியானாலும் ஒரு நடிகரின் படம் வெளியாகும் போது மற்ற நடிகர்கள் படங்கள் வெளியாகாது என்று சொல்லாம். ஆனால், சில தவிர்க்க முடியாத சமயங்களில் இரு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் சூழ்நிலையும் உருவாகும். அந்த மாதிரியான ஒரு சூழலை தற்போது தமிழ் சினிமா சந்தித்துள்ளது.
தமிழில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள முக்கிய நடிகர்களான விஜய் மற்றும் அஜித் படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகின. விஜய் நடிப்பில் வாரிசு படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சியும், அஜித் நடிப்பில் துணிவு படத்தை இயக்குனர் எச்.வினோத்தும் இயக்கியுள்ளனர்.
வாரிசு, துணிவு இரண்டு படங்களை ஒப்பிடும்போது துணிவுக்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெரிய ஸ்கிரீன்களும் அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது. துணிவு படத்திற்கு 65 சதவீதமும், வாரிசு படத்திற்கு 35 சதவீதமும் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அதிகாலை 1.30 மணி அளவில் திருச்சி மாநகரத்தில் துணிவு படத்தில் முதல்காட்சி வெளியிடப்பட்டது. இதனால் இரவு 10 மணி முதல் அஜித் ரசிகர்கள் திரையரங்கம் முன்பு அதிகளவில் கூடி நின்று உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தனர்.
சரியாக 1 மணி அளவில் திரையரங்கிற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படும்போது அஜித் ரசிகர்கள் மிக உற்சாகமாக மேள தாளங்கள் முழங்க நடனமாடிக் கொண்டும், அஜித் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தும், தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி நடனம் ஆடினர்.
வான வேடிக்கை பட்டாசுகள் வெடித்து, உற்சாகமாக நடமாடிய பிறகு படத்தை பார்ப்பதற்கு திரை அரங்குக்குள் சென்றனர். அதிகாலை 4.30 மணியளவில் நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியானது. இந்த படங்கள் வெளியான தியேட்டர்கள் அருகில் எந்தவிதமான அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருப்பதற்காக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிங்க: ஆம்பூரில் 'துணிவு' படத்திற்காக அஜித் ரசிகர்கள் வைத்த 100 அடி பேனர்!