திருச்சியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) சார்பில் மின்னணு அரசு மற்றும் பொது சேவை விநியோக முறை குறித்த சர்வதேச ஆய்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், " நவீன காலத்திற்கு ஏற்ப சான்றிதழ்கள், அரசின் பல்வேறு செயல்பாடுகள் இ - சேவை மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இது முதல் கட்ட முயற்சிதான். இ- சேவை மையங்களில் சான்றிதழ் பெறுவதற்கு தற்போது ஏற்படும் தாமதங்கள் விரைவில் சரிசெய்யப்படும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், " மக்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்தவும், அலைச்சலை மிச்சப்படுத்தும் வகையிலும் இந்த இ - சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக 85 வட்டங்களும், 11 கோட்டங்களும், 5 மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, மற்றும் வேலூர் மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
கலகலப்பாய் பேசும் அமைச்சர் உதயகுமார் பூலோக அடிப்படையிலும், மக்கள் தொகை, வருவாய் கிராமங்கள், வட்டங்கள், கோட்டங்கள் அடிப்படையில் மாவட்டங்கள் பிரிக்கப்படுகிறது. புதிய மாவட்டங்களை உருவாக்குவது குறித்து முதல்வர் கொள்கை முடிவை எடுத்து அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்.