தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று இரவு திருச்சி வந்தார். சென்னையிலிருந்து விமானம் மூலம் வந்த அவரை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு விமான நிலையத்தில் வரவேற்றார். திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள சுற்றுலா மாளிகையில் அவர் ஓய்வு எடுத்தார். இதன் பின்னர் இன்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதன்பின்னர் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். மேலும், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருச்சி அனைத்து பெண்கள் சங்கங்கள் மற்றும் ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி சார்பில் நடைபெற்ற அகில உலக பெண்கள் தின விழாவில் அவர் கலந்துகொண்டார்
இந்த விழாவில் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ”வருடத்தில் 365 நாட்களும் மகளிர் தினம்தான். ஆனால் வெளிநாடுகளில் ஒவ்வொரு நாளையும் நினைவுகூரும் வகையில் சம்பிரதாயமாக மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. வெளிநாடுகளில் பெண்களை வீட்டை நிர்வகிப்பவர்கள் என்று அழைக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில்தான் பெண்களை இல்லத்தரசி என்று அழைக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது. ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டுமென்றால் ஆண்கள் எளிதில் புறப்பட்டுவிடுவார்கள். ஆனால் பெண்கள் வெளியே வருவது என்றால் குழந்தைகள், மாமனார், மாமியார், கணவர், சமையல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்திய பின்னரே புறப்பட முடியும். பெண்கள் வெளியே வருவதே பெரிய சாதனையாகும்.
வாழ்க்கை வாழ்வதற்கே. அதனால் மகிழ்ச்சியுடனும், சந்தோஷத்துடனும், ஆரோக்கியத்துடனும், கவலையின்றி பட்டாம்பூச்சிகளை போல் வாழ வேண்டும். ஆண்கள் நம்மோடு எந்த விஷயத்திலும் போட்டி போட முடியாது. நம் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. அதனால் நாம் அச்சப்பட தேவையில்லை. எனினும் அஜாக்கிரதையாக இருந்துவிடக்கூடாது. அதனால் தான் கூட்டங்கள் கூடுவதை தவிர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அடிக்கடி சோப்பு பயன்படுத்தி கை கழுவும் முறையை கடைபிடிக்க வேண்டும். 80 சதவீத நோய் கை உள்ளிட்ட பல அம்சங்களில் படிந்திருப்பன் மூலமே பரவுகிறது. பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் குடும்பத்தினரை நன்றாக கவனித்துக் கொள்ள முடியும்.
கையெடுத்து கும்பிடுவதுதான் நம் நாட்டின் கலாசாரம். இத்தகைய நமது கலாசாரத்தை வெளிநாட்டினர் கடைபிடிக்க தொடங்கியுள்ளனர். அதனால் நம் நாட்டின் கலாசாரத்தை பின்பற்றினால் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. குறிப்பாக கொரோனா வைரஸூக்கும் நாம் பயப்பட வேண்டிய நிலை இருக்காது.