24 மணி நேரம் ஆகியும் மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்றுவருவதால் குழந்தை சுர்ஜித்தின் பெற்றோர் மீட்புப் படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில், 'எங்கள் குழந்தையே உறவினர்களுடன் இணைந்து நாங்களே மீட்டுக்கொள்கிறோம்' என்று சோகம் தோய்ந்த ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.
'குழந்தையை மீட்க 4 மணி நேரம் ஆகும்' - தீயணைப்புத் துறை டிஜிபி - ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித்
திருச்சி: ஆழ்துளைக் கிணற்றில் 80 அடி ஆழத்திலிருந்த குழந்தை 85 அடி ஆழத்திற்குச் சென்றுவிட்ட நிலையில் சுர்ஜித்தை மீட்க நான்கு மணி நேரம் ஆகும் என தீயணைப்புத் துறை தலைமை இயக்குநர் காந்திராஜன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் 80 அடி ஆழத்திலிருந்த 85 அடி ஆழத்திற்குச் சென்றுவிட்டது. ஆழ்துளை கிணற்றிலிருந்து மூன்று மீட்டர் தொலைவில் குழிதோண்டும் பணி நடைபெற்றுவருகிறது.
இது குறித்து தீயணைப்புத் துறை தலைமை இயக்குநர் காந்திராஜன், "குழிதோண்டி மீட்க நான்கு மணி நேரத்திற்கு மேல் ஆகும். என்எல்சி, ஓஎன்ஜிசி, தீயணைப்புத் துறையினர் இணைந்து ஒரு மீட்டர் அகலத்திற்கு 90 அடிக்கு குழிதோண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 90 அடிக்கு குழிதோண்டிய பின் இரண்டு தீயணைப்பு வீரர்களை குழிக்குள் இறக்கி குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.