தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'குழந்தையிடம் எந்தவித சிக்னலும் இல்லை' - அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல் - அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை

திருச்சி: ஆழ்துளைக் கிணற்றில் சிக்கித் தவித்துவரும் குழந்தையிடம் எந்தவித சமிக்ஞையும் வராதது மிகுந்த வேதனையளிப்பதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

vijayabaskar

By

Published : Oct 26, 2019, 8:39 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது. சம்பவ இடத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் முகாமிட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்துவரும் நிலையில், அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

தொடர்ந்து முயற்சி செய்வோம்

அப்போது, "ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்க ரிக் இயந்திரம் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் மீட்கும் முயற்சி தோல்வியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக ஓஎன்ஜிசி, என்எல்சி நிறுவனம் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் ஆகியவற்றுடன் தமிழ்நாடு தீயணைப்புத் துறையினர் இணைந்து புதிய முயற்சியின் மூலம் சிறுவனை மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய முயற்சிக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் சம்மதம் தெரிவித்துள்ளது.

கிணற்றின் அருகே மூன்று மீட்டர் தூரத்தில் ஒரு மீட்டர் அகலத்தில் புதிதாக குழி தோண்டப்படுகிறது. எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள என்எல்சி நிறுவனத்தின் ரிக் இயந்திரம் மூலம் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்தப் புதிய ஆழ்துளைக் கிணறு 80 அடி ஆழத்தில் அமைக்கப்படுகிறது. தீயணைப்பு வீரர் ஒருவர் பாதுகாப்பு கவசங்களுடன் உள்ளே சென்று சிறுவனை மீட்கத் தயார் நிலையில் உள்ளார்.

தற்போது 85 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியுள்ளான். ஏற்கனவே கூறியதுபோல் இன்று காலை முதல் சிறுவனிடமிருந்து எந்தவிதமான சமிக்ஞையும் (சிக்னல்) வராதது கவலையளிக்கிறது.

எனினும் அவனை உயிருடன் மீட்கப் போராடிவருகிறோம். ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் சிறுவன் மேலும் ஆழத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறான். இதனால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப முயற்சிகள் கைவிடப்பட்டுள்ளன" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details