கரும்பு விவசாயிகள் அரை நிர்வாணமாக போராட்டம் திருச்சி:கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு விவசாயிகளிடம் செங்கரும்பை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்கும் பொங்கல் தொகுப்பில் வழங்கி வந்தது. ஆனால், இந்த ஆண்டு தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம் பெறாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
குறிப்பாக, தமிழக அரசு கரும்பை கொள்முதல் செய்யவில்லை என்றால், 5 ரூபாய்க்கும் கீழ் விவசாயிகள் கரும்பை விற்கும் நிலை ஏற்படும். ஆதலால், அரசு விவசாயிகளிடம் செங்கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர், அதன் மாநிலத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரை நிர்வாணமாக தரையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த விவசாயிகள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:சத்தியமங்கலம் அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!