திருச்சி: காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு, தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரைத் திறந்து விட வலியுறுத்தியும், உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்குப் பின் திறக்கப்படும் குறைந்த நீரைக் கூட தடுக்கும் கர்நாடக அரசு மற்றும் பாஜக, பிற அமைப்புகளைக் கண்டித்தும், தமிழகத்திற்கு காவேரி தண்ணீர் திறந்து விடக் கூடாது. மேலும், பல்வேறு கன்னட அமைப்புகள் கர்நாடகாவில் போராட்டங்கள் நடத்தி வருவதைக் கண்டித்தும், தமிழக அரசு பலமுறை மத்திய அரசிடம் வலியுறுத்தியும், தமிழக விவசாயிகளைப் பற்றி கவலைப்படாத மத்திய பாஜக அரசைக் கண்டித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று போராட்டம் நடைபெற்று வருகின்றன.
அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டம் முழுவதும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம், திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றன. திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சாலை மறியலில் ஈடுபட்டு கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.