திருச்சி: தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு பள்ளிகளில் சிறந்த பள்ளிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. இதில் திருச்சி மாவட்டத்தில், புத்தூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, லால்குடி ஒன்றியத்தில் எசனை கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மணிகண்டம் ஒன்றியத்தில் கே.கே.நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவை சிறந்த பள்ளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
புத்தூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்றுகொள்ள ப்ரொஜெக்டர் மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு மாணவர்களுக்கும் கையடக்க மடிக்கணினி, பாடங்கள் குறித்து செய்முறை விளக்கம், கல்வி பயில ஏதுவாக ஒவ்வொரு வகுப்பறையிலும் ஏசி பொருத்தப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் கிளாஸ் முறை.. ஷார்ப்பான மாணவர்கள் மேடை பேச்சுகளில் மாணவர்கள் தங்கள் தனித்திறமை வளர்த்து கொள்வதற்காக வகுப்பறையில் மைக் மூலம் அவர்கள் பேசுவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளிகளில் மாணவர்கள் விளையாடுவதற்கு அனைத்து விளையாட்டு உபகரணங்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளியை மிஞ்சும் அளவுக்கு அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் இப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, புத்தூர் பள்ளி தலைமை ஆசிரியை அம்சவள்ளி கூறியதாவது, கடந்த 2020ஆம் ஆண்டு, இந்த பள்ளி தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற போது 20 மாணவ, மாணவியர்கள் மட்டுமே படித்தனர். மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தி மாணவர் சேர்க்கை அதிகப்படுத்துவதற்காக, ஸ்மார்ட் வகுப்பு, ஸ்போக்கன் இங்கிலீஷ், அபாகஸ் வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது க்யூ புக் வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என்பதை தங்கள் பள்ளி நிரூபித்துள்ளது என்றார். இந்த பள்ளியின் முன்னேற்றத்தை பார்த்த தனியார் பள்ளி மாணவர்கள் பலர், இங்கு சேர்க்கை பெற ஆர்வமாக உள்ளனர். இடவசதி பற்றாக்குறையை கருத்தில் கொண்டு புதிய மாணவர் சேர்க்கை காண அடிப்படை வசதிகளை செய்து தருமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். வரும் கல்வி ஆண்டில் கூடுதல் வகுப்பறை கட்டி தருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
இந்த பள்ளியில் 170 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். சமீபத்தில் திருச்சியில் நடந்த அறிவியல் மாநாட்டில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள், மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்று மாநில அளவில் கலந்து கொள்ள உள்ளனர். வரும் 10ஆம் தேதி, அதில் பங்கேற்க 2 மாணவர்கள் தூத்துக்குடி செல்கின்றனர். பள்ளி வளர்ச்சியில், மேலாண்மை குழுவின் பங்களிப்பு மிக சிறப்பாக உள்ளது என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:உயிரை சூறையாடும் சென்னை சாலைகள்.. சீரமைக்கப்படுமா?