தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

24 மணி நேர வர்த்தகத்துக்கு சிறு வணிகர்கள் எதிர்ப்பு!

திருச்சி: வர்த்தக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்படலாம் என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவுக்குச் சிறு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சிறு வணிகர்கள் எதிர்ப்பு

By

Published : Jun 8, 2019, 12:06 PM IST

தமிழ்நாட்டிலுள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான சிறு, பெரிய அளவிலான வர்த்தக நிறுவனங்கள் இனி 24 மணி நேரமும் வர்த்தகம் செய்யலாம் எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதனால் திரையரங்குகள், பெரிய அளவிலான வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்டவை 24 மணி நேரமும் திறந்திருக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், இதற்கு சிறு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து திருச்சி மாவட்ட வணிகர் சங்க செயலாளரும், காந்தி அங்காடி வியாபாரிகள் முன்னேற்றச் சங்க செயலாளருமான கமலக்கண்ணன், "24 மணி நேரமும் பெரிய நிறுவனங்கள் திறந்து இருந்தால் சில்லறை வணிகம் முற்றிலும் பாதிக்கப்படும். காய்கறி முதல் ஜவுளி, மளிகை, நகை வணிகம் வரை வால்மார்ட், ஹால்மார்ட், டி மார்ட், ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் இறங்கி சில்லறை வியாபாரிகளின் வணிகத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது. உதாரணமாக இரவு 9 மணிக்கு மேல் இதுபோன்ற பெரிய நிறுவனங்கள் இயங்குவது இல்லை. இரவு ஒன்பது மணிக்கு மேல் தான் சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகின்றனர்.

24 மணி நேரமும் பெரிய நிறுவனங்கள் கடை திறந்திருந்தால் மக்கள் அங்கு தான் செல்வார்கள். சிறு வியாபாரிகளுக்கு வியாபாரம் ஆகாது. திருச்சி நகரில் ஜங்ஷன், மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, தில்லைநகர், பால்பண்ணை நால்ரோடு, சமயபுரம், ஸ்ரீரங்கம் போன்ற பகுதிகளில் வணிக நிறுவனங்கள் இரவு முழுவதும் செயல்படுகின்றன.

சிறு வணிகர்கள் எதிர்ப்பு

அதேபோல், திருச்சி புறநகரில் தொழிற்சாலைகள் இரவு முழுவதும் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. திருச்சி நகர் முழுவதும் 24 மணி நேரமும் வணிக நிறுவனங்கள் இயங்கினால் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படும். வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகமாக நடக்கும். ஆகவே, இந்த ஆணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்றார்.

சிறு வணிகர்கள் இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க பொதுச் செயலாளர் ராஜசேகரன் தமிழ்நாடு அரசின் உத்தரவை வரவேற்றுள்ளார்.

இது குறித்து அவர், "தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவால் வியாபாரிகளுக்கு வருமானம் பெருகும். வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். 24 மணி நேரமும் வர்த்தக நிறுவனங்கள் திறந்து இருந்தால் குற்றச் செயல்கள் அதிகரிக்கும் என்ற காரணத்தைக் கூறி வர்த்தக நிறுவனங்களை மூடுவது முறையற்ற செயல். சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினருக்கு வர்த்தகர்களும் ஒத்துழைப்பு கொடுப்பார்கள்" என்றார்

ABOUT THE AUTHOR

...view details