திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ளது பாம்பாட்டிபட்டி. இங்கு செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆறு மாதத்திற்கு முன்பு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்றிருந்தது.
இந்த சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் முறைகேடு நடப்பதாக பொதுமக்கள் கூறியதையடுத்து சுற்றுச்சுவர் கட்டும் பணி கைவிடப்பட்டது. இதனையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விளக்கம் கேட்டனர். அப்போது அவர்கள் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி முடிவடைந்து விட்டதாக கூறியுள்ளனர்.
பள்ளி சுற்றுச் சுவரை காணவில்லை பேனர் இதனையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசு பள்ளி சுற்றுச்சுவரை காணவில்லை என்று பள்ளி அருகே பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் ''எங்கள் அருமை சுற்றுச்சுவர் கட்டிடமே? உன்னை காணாமல் வெகுநாட்கள் அவதிப்படுகிறோம்? எப்போது நீ வருவாய்? உனக்காக கண்ணீரோடு காத்திருக்கிறோம்? உன்னை யார் திருடினார்கள்? அரசு நடவடிக்கை எடுக்குமா? நீ வந்தால் தான் எங்களுக்கு நிம்மதி'' என்று எழுதியிருந்தது.
மேலும் இதுகுறித்து அலுவர்கள் , காவல்துறையினரிடம் சுற்றுச்சுவரை கண்டு பிடித்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.