இஸ்ரேலை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்! திருச்சி:பாலஸ்தீனில் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் அராஜக தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும், பாலஸ்தீன் நாட்டுக்கு இந்தியாவின் ஆதரவை இந்தியா தொடர வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட பாலஸ்தீன் நாட்டை அராஜகமாக ஆக்கிரமிப்பு செய்யும் இஸ்ரேலின் நடவடிக்கையை ஐ.நாவும், உலக நாடுகளும் தடுத்து நிறுத்திட வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர், திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில், தெற்கு மாவட்ட தலைவர் தமிமுன் அன்சாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, தெற்கு மாவட்ட தலைவர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் பேசியதாவது,“கடந்த சில நாட்களாக பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது. இந்த போரைக் கண்டித்து இந்தியா முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில், மாவட்ட தலைநகரங்களில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க:விருதுநகரில் மதப்பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு; ஆர்எஸ்எஸ் பிரமுகர்களுக்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன்!
இந்நிலையில், இந்தியா மற்றும் பல்வேறு உலக நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். இஸ்ரேலை பல்வேறு உலக நாடுகள் கண்டிக்க வேண்டும். இஸ்ரேல் அரசு, பாலஸ்தீன மக்கள் மீது தற்போது மனிதாபிமானம் அற்ற செயலை கட்டவிழ்த்துள்ளது.
பாலஸ்தீன மக்களுக்கு மருத்துவ உதவி, உணவு, குடிநீர், மின்சாரம் ஆகிய அத்தியாவசியத் தேவைகளை இஸ்ரேல் நாடு தடுத்து வைத்துள்ளது. எனவே, பல்வேறு உலக நாடுகள் மற்றும் ஐநா சபை இந்த செயலைக் கண்டித்து பாலஸ்தீன மக்களுக்கு முழு மனித உரிமைகளை வழங்க வேண்டும்” என்று கூறினார்.
திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் முகமது சித்திக், கிழக்கு தொகுதி தலைவர் வாசிக், SDTU மாநிலச் செயலாளர் முகமது ரபீக், தெற்கு மாவட்டச் செயலாளர்கள் தளபதி அப்பாஸ், ஏர்போர்ட் மஜீத், தெற்கு மாவட்ட பொருளாளர் பக்ருதீன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ரஹீம், தெற்கு மாவட்ட செய்தித் தொடர்பாளர் சதாம் உசேன் மற்றும் தொண்டர் அணி மாவட்ட தலைவர் ஆரிப், தொகுதி நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், WIM மாவட்டத் தலைவர் தௌலத் நிஷா மற்றும் நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:நியோமேக்ஸ் நிதி மோசடி விவகாரம்; மனுவை தள்ளுபடி செய்ய தமிழக அரசு வாதம் - அக்.20-இல் தீர்ப்பு!