கரோனா நோய்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் அளிப்பதாக கூறிய நிலையில், இதுவரை சிறப்பு ஊதியம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் இன்று ஒருநாள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மணப்பாறை தூய்மைப் பணியாளர் சங்க தலைவர் இந்திரஜித் பேட்டியளித்துள்ளர். அவர் கூறியதாவது, “நாடு முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் சிறப்பான முறையில் நோய் தொற்றுகளை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தமிழ்நாடு அரசானது சிறப்பு ஊதியம் அளிப்பதாக கூறி இருந்த நிலையில், அந்த அறிவிப்பு இதுவரை அறிவிப்பாகத்தான் இருக்கிறது.
கரோனா நோய் தொற்று தடுப்பு பணியில் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றுவதால் போராட்டம் அறிவிக்கக்கூடாது என்பதற்காக கருப்பு பேட்ஜ் அணிந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். தூய்மைப் பணியாளர்களின் காலில் விழுவதோ, அவர்களுக்கு விளக்கேற்றுவதோ, கை தட்டுவதோ கௌரவம் ஆகாது. அவர்களுக்கான சிறப்பு ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும். கடந்த பத்து வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில், தூய்மைப் பணியாளர்கள் தேர்வு செய்து வருவதை கை விட்டுவிட்டு, நிரந்தர பணிக்காக தூய்மைப் பணியாளர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க:திருச்சி டாஸ்மாக் கடைகளில் முன்னெச்சரிக்கை பணிகள் மும்முரம்