தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் செம்மண் கடத்தல்.. அதிகாரியை தாக்கிய ஊராட்சி மன்றத் தலைவர்(திமுக) கைது! - Revenue inspector attacked by panchayat president

திருச்சி துறையூர் வருவாய் ஆய்வாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய ஊராட்சி மன்றத் தலைவர் (திமுக) உள்பட 3 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மணல் கொள்ளை.. வருவாய் ஆய்வாளரை தாக்கிய ஊராட்சி மன்றத் தலைவர் கைது
மணல் கொள்ளை.. வருவாய் ஆய்வாளரை தாக்கிய ஊராட்சி மன்றத் தலைவர் கைது

By

Published : May 28, 2023, 12:13 PM IST

திருச்சி: துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சியில் சட்ட விரோதமாக அனுமதி இன்றி செம்மண் அள்ளுவதாக துறையூர் வட்டாட்சியர் வனஜாவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை, சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்ய வட்டாட்சியர் வனஜா அறிவுறுத்தி உள்ளார்.

இந்த அறிவுறுத்தலின் பேரில், இரவு 10 மணியளவில் நரசிங்கபுரத்தில் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் ஆய்வு செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு அனுமதி இன்றி ஒரு ஜேசிபி இயந்திரத்தின் உதவி உடன் டிராக்டர் ஒன்று மண் அள்ளுவதை வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் பார்த்து உள்ளார்.

இதனைத் தொடர்ந்து மணல் அள்ளப் பயன்படுத்தப்பட்ட வண்டி எண்களையும் ஆய்வாளர் பிரபாகரன் குறித்துக் கொண்டிருந்துள்ளார். அந்த நேரத்தில் நரசிங்கபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரன் (திமுக), ஜேசிபி உரிமையாளர் மணி கிருஷ்ணன் மற்றும் ஜேசிபி ஓட்டுநர் தனபால் ஆகியோர் அங்கு வந்துள்ளனர்.

இதனையடுத்து மணல் அள்ளுவதை ஆய்வு செய்து வாகனங்களின் எண்களை குறித்த ஆய்வாளரை ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட 3 பேரும் சேர்ந்து கண்மூடித்தனமாக வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளதாகத் தெரிகிறது. இதனால் படுகாயம் அடைந்த வருவாய் ஆய்வாளர் பிரபாகரன், துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பின்னர் இது குறித்து அவர் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இந்தப் புகாரின் கீழ் வழக்கு பதிவு செய்த துறையூர் காவல் துறையினர், தாக்குதல் நடத்தியவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், நரசிங்கபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரன் (45) மற்றும் ஜேசிபி ஓட்டுநர் தனபால் (40) ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், தலைமறைவாக உள்ள ஜேசிபி உரிமையாளர் மணி கிருஷ்ணன் என்பவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். முன்னதாக, கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த லூர்து பிரான்சிஸ், மணல் கொள்ளையத் தடுத்ததாக அவரது அலுவலகத்தில் வைத்தே வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்குள், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா மெனசி ஊராட்சியின் கிராம நிர்வாக அலுவலரான இளங்கோ, கனிம வளக் கொள்ளையை தடுத்ததாக, அவரை டிராக்டர் ஏற்றி கொள்ள முயற்சித்த நிலையில், அவர் அருகில் இருந்த காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

இதனிடையே, கடந்த மாதம் கிராம நிர்வாக அலுவலர் மணல் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர்கள் தமிழ்நாடு அரசிடம் துப்பாக்கி கேட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கனிமவளக்கொள்ளையைத் தடுத்த VAO - தருமபுரியில் டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details