திருச்சி மாவட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் உணவக விடுதியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் 2019 தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை குறித்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
இதில், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா புதிய கல்விக் கொள்கை அறிக்கை குறித்து விரிவுரை ஆற்றினார்.
புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் - கல்லூரி ஆசிரியர் கழகம் பின்னர் மாநில தலைவர் கோகுல்நாத் பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 'மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர் கழக சார்பில் இந்த கருத்தரங்கம் நடத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே கல்வி வணிகமயமாகிவிட்ட நிலையில் மேலும் பாழ்படுத்தும் வகையில் இந்த புதிய கல்விக் கொள்கை வரைவு அமைந்துள்ளது. தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களது சங்கத்தின் நோக்கம். ஆனால் புதிய கொள்கை இந்த நோக்கத்தில் இருந்து வேறுபட்டுள்ளது. அதனால் இந்த புதிய கல்விக் கொள்கை அறிக்கையை மத்திய அரசு திரும்பப்பெற்று மாற்றி அமைக்க வேண்டும்' என்றார்.