திருச்சி:திருச்சி மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். கொலைக் குற்றவாளிகள், ஆயுள் தண்டனைக்கைதிகள் எனப் பலர் அங்கு தண்டனை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று (ஜூன் 4) சிறையில் உள்ள பிரபல ரவுடி மதுரை வெள்ளை காளி உள்பட 11 கைதிகள் தாக்கப்பட்டதாக தகவல் பரவியது. தகவலறிந்து சிறை வாசல் முன் கைதிகளின் உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் திரண்டனர். கைதிகளை அடித்து துன்புறுத்தும் சத்தம் கேட்பதாக கூறி உறவினர்கள் வீடியோ பதிவு செய்தனர்.
மேலும் இதுகுறித்து திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தரிடம் வழக்கறிஞர்கள் புகார் மனு அளித்தனர். திருச்சி மத்திய சிறையில் கண்காணிப்பாளராக உள்ள செந்தில்குமார் தொடர்ந்து குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த கைதிகளை அடித்து துன்புறுத்துவதாகவும், மற்ற சமூகத்தைச் சேர்ந்த கைதிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பதாகவும் வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
இந்தநிலையில் வெள்ளை காளி உள்பட 11 கைதிகள் சிறையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறை அலுவலர்கள் வழக்கறிஞர்களிடம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. சிறை கண்காணிப்பாளராக உள்ள செந்தில்குமார் ஆறு மாதங்களுக்கு முன், திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மத்திய சிறையில் சாதியப் பாகுபாடு? இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது - ஈபிஎஸ் விமர்சனம்