திருச்சி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் திருச்சியில் வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை முருகனின் மனைவி நளினி, ஜெயக்குமார் மனைவி சாந்தி ஆகியோர் இன்று (நவ.14) நேரில் சந்தித்துப் பேசினர்.
அவர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நளினி, 'தற்போது முகாமில் உள்ளவர்கள் நலமுடன் இருக்கிறார்கள். மத்திய அரசும், மாநில அரசும் அவர்களை விரைவாக முகாமிலிருந்து வெளியே அனுப்ப வேண்டும். சாந்தன் இலங்கைக்கு செல்கிறேன் என்கிறார். நானும் என் கணவர் முருகனும் லண்டன் செல்ல விரும்புகிறோம்.
ஆனால், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகிய இருவரும் அது குறித்து இன்னமும் முடிவெடுக்கவில்லை. நமக்கு நல்லது செய்தவர்களை சங்கடத்திற்குள்ளாக்க நான் விரும்பவில்லை, அதனால் தான் முதலமைச்சரை சந்திக்கவில்லை. முதலமைச்சர் எங்களுக்கானதைப் பார்த்து கொள்வார்.
கடந்த 16 ஆண்டுகளாக என் மகளை பிரிந்துள்ளேன், லண்டன் சென்று அவரோடு சேர்ந்து வாழ ஆசைப்படுகிறோம். முகாம் என்பது தற்போது சிறைபோல் உள்ளது. அதனால் அவர்களை வெளியில் அனுப்ப வேண்டும்.