திருச்சி:பிச்சாண்டார் கோவில் அடுத்து வாளாடி ரயில் நிலைய முன்பாக ரயில் தண்டவாளத்தின் நடுவே இரண்டு டயர்கள் இருந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்னைக்கு செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், ரயில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் வந்தபோது இன்ஜினை இயக்கி வந்த ஓட்டுநர் தண்டவாளத்தில் லாரி டயர்கள் இருப்பதைக் கண்டு சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியுள்ளார். ஆயினும் ரயில் இன்ஜின் பழுது ஏற்பட்டு 4 பெட்டிகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனை அடுத்து ரயில் ஓட்டுநர் டயர்களை அப்புறப்படுத்தி இன்ஜினை சரி செய்து 45 நிமிடம் தாமதமாக புறப்பட்டது. இது குறித்து ரயில் ஓட்டுநர் விருத்தாச்சலம் ரயில்வே இருப்பு பாதை காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து 3 ஆம் தேதி காலை திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் சென்று ஆய்வு செய்து தமிழக காவல்துறை சார்பில் 2 தனிப்படையும், ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலையம் சார்பில் 2 தனிப்படை, ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் 1 தனிப்படை என 5 தனிப்படைகள் அமைத்து யார் குற்றவாளிகள் என தேடி வந்தனர்.
குற்றவாளியை பிடிப்பதில் தோய்வு ஏற்பட்டதால் மேலும் ஒரு தனிப்படை அமைத்து, மோப்பநாய் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசார் விசாரணையில் லாரி டயரின் உரிமையாளர், அதே பகுதியை சேர்ந்த கலையரசன் என தெரியவந்தது. அவரை விசாரணை செய்ததில் அவருக்கும் இந்த டயர் தண்டவாளத்தில் வைத்ததற்க்கும் சம்பந்தம் இல்லை என்றும், யாரோ எடுத்து வைத்துள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் 30க்கும் மேற்பட்டோரிடம் செல்போன் டவர் தொலைபேசி எண் சிக்னலை வைத்து விசாரணை செய்து வந்தனர். அதில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரண்டாவது முறையாக ஓட்டுநர் வாஞ்சிநாதன் என்பவரை விசாரணை அழைத்தபோது அவருக்குத் தெரிந்த தகவல்களை போலீசாரிடம் தெரிவித்த பின் அவரை விடுவித்தனர்.
இதனை அடுத்து லால்குடி பின்னவாசல் பகுதியில் டாஸ்மாக்கில் பணிபுரியும் வெங்கடேசனை விசாரணை செய்த போது, கடந்த இரண்டாம் தேதி இரவு 11 மணிக்கு மேல் வீட்டிற்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்ததாகவும், அந்த சமயத்தில் டயர்கள் இருந்த இடத்தில் பிரபாகரன் மற்றும் கார்த்திக் ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்தாகவ தெரிவித்துள்ளார்.