திருச்சி:மருங்காபுரி வட்டம் பொன்னம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட துவரங்குறிச்சி கிராமம் ஆத்துப்பட்டியில், சர்வே எண்: 83-ல் கடந்த சுமார் 60 வருடங்களுக்கும் மேலாக 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இரண்டு தலைமுறையாகக் குடியிருந்து வரும் இந்த இடம், வண்டிப்பாதை என்று வருவாய்த்துறை ஆவணத்தில் யூடிஆர் செய்யப்படுவதற்கு முன்பு இருந்துள்ளது.
மேற்படி இவர்கள் குடியிருக்கும் வீட்டிற்கு முறையாக வீட்டு ரசீது, விஏஓ சான்று, வீட்டு மின் இணைப்புக்கான ரசீது, ஆதார் கார்டு, குடும்ப அட்டை என மேற்கண்ட முகவரியில் வசிப்பதற்கான மாநில, மத்திய அரசின் ஆவணங்களும், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறை தீர்ப்பு பிரிவில் 2012ஆம் வருடம் பட்டா கேட்டு அளித்த மனு நகலும் வைத்துள்ளனர்.
மேலும், தினக் கூலி வேலைக்குச் செல்லும் இவர்களுக்கு வேறு எங்கும் இடம் கிடையாது. வறுமையில் கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி அன்று இவர்கள் வசிக்கும் அந்தப் பகுதி நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது என்றும், உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் என்றும் மணப்பாறை நெடுஞ்சாலைத் துறையினர் அறிவிப்பு கடிதம் அனுப்பி உள்ளனர்.
இந்த திடீர் அறிவிப்பு கடிதத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், தங்களுக்கு மாற்று இடம் வழங்கிட கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சருக்கு இதுகுறித்து பதிவுத் தபாலில் மனு அனுப்பி உள்ளனர். ஆனால், மனு கொடுத்து பல மாதங்கள் ஆகியும் பதில் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.