தமிழ்நாட்டில் கரோனாவின் கோரதாண்டவத்தால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதுவரை, ஒரு லட்சத்து 86 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 3,144 பேர் உயிரிழந்துள்ளனர். நோயாளிகளின் அதிகரிப்பால் அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் தனியார் மருத்துவமனைகளின் உதவியும் அரசிற்கு தேவைப்படுகிறது.
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அரசுக்கும், மக்களுக்கும் தோளோடு தோளாக நிற்க வேண்டிய தனியார் மருத்துவமனைகள், இந்தக் கரோனா காலத்திலும் காசு பார்த்து கல்லா கட்ட நினைப்பது ’எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்’ என்று பணத்தை மட்டும் குறிக்கோளாகக் கருதி செயல்படுவது வேதனையளிப்பதாக பொதுமக்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 135 தனியார் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில் 110 தனியார் மருத்துவமனைகள், 25 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும் அடங்கும். அந்த வகையில், திருச்சியில் தேவதானம் ஜிவிஎன் மருத்துவமனை, மணப்பாறை சிந்துஜா மருத்துவமனை, தென்னூர் மாருதி மருத்துவமனை, தென்னூர் காவேரி மருத்துவமனை ஆகிய ஐந்து மருத்துவமனைகளில் முதற்கட்டமாக கரோனாவுக்கு சிகிச்சையளிக்க அனுமதி வழங்கப்பட்டது. அடுத்தக்கட்டமாக புத்தூர் சுந்தரம், அப்பல்லோ, எஸ்ஆர்எம் உள்ளிட்ட மேலும் சில மருத்துவமனைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் தங்களது சொந்த செலவில்தான் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த வகையில், கரோனா தொற்றால் பாதிக்கப்படும் வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிறுநீரகப் பாதிப்பு, நீரிழிவு நோய், இதயக் கோளாறு போன்று ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கரோனாவின் வீரியத்திற்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் உயிரிழந்துவருகின்றனர். இத்தகைய உயிரிழப்பு திருச்சி தனியார் மருத்துவமனைகளில் அதிகளவில் ஏற்படுவதாக மாவட்டச் சுகாதாரத் துறை தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கரோனாவின் தீவிரத்தால் ஆபத்தான நிலையை அடையும் நோயாளிகளை அவசர அவசரமாக அரசு மருத்துவமனைக்கு மாற்றும் செயல்களில் சில தனியார் மருத்துவமனைகள் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால்தான் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் உயிரிழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முடிந்தவரை பணத்தைப் பெற்றுக்கொண்டு கடைசி நேரத்தில் நோயாளிகளைக் கைகழுவும் செயலை தனியார் மருத்துவமனைகள் அரங்கேற்றிவருகின்றன.
இதுமட்டுமில்லாமல், கரோனாவைக் காரணம் காட்டி இதர அவசர நோய்களுக்கும் சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் மறுப்புத் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மாரடைப்பு, விபத்தால் ஏற்படும் காயம் போன்றவற்றுக்கும் சிகிச்சை அளிக்க ஆரம்பத்தில் மறுத்துவிட்டு, பின்னர் அதிகப்படியாக செலவாகும் என்று ரமணா பட பாணியில் உறவினர்களிடம் பேரம் பேசப்படுவதாகவும் கூறப்படுகிறது.
முதலில் கரோனா பரிசோதனை முடிவுவந்த பின்னர்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது. அறுவைச் சிகிச்சை போன்றவற்றுக்கும் பாதுகாப்பு கவச உடை உள்ளிட்ட பல்வேறு கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் காரணம் காட்டி சிகிச்சை கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தி வசூலிப்பதாகவும் அடுக்கடுக்கான குற்றஞ்சாட்டுகளைப் பொதுமக்கள் முன்வைக்கின்றனர்.