திருச்சி:சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த படியாக இரண்டாவது சர்வதேச விமான நிலையம் என்ற பெயரை பெற்றுள்ளது.
அதேபோல், விமானத்தில் வரும் பயணிகள் சட்ட விரோதமாக தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சி நோட்டுகளை கடத்தி வருவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக சமீபகாலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், திருச்சி விமான நிலையத்தில் நேற்று மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்தது.
விமானத்தில் பயணம் செய்யும் பயணி ஒருவர் கரன்சி நோட்டுகளை கடத்திக் கொண்டு செல்வதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், விமான நிலைய முனையம் முழுவதும் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த சோதனையில் பயணிகளில் ஒருவரது பை மற்றும் பர்ஸ் ஆகியவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் சுமார் 170 எண்ணிக்கை கொண்ட 100 அமெரிக்க டாலர் நோட்டுகள் இருந்தது தெரிய வந்தது. அதன் பின்னர் அவரிடம் இருந்த கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் இந்திய ரூபாய் மதிப்பு சுமார் 13 லட்சத்து 82 ஆயிரத்து 950 ஆகும்.