தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்வியில் சிறந்து விளங்கிய கங்கைகொண்ட சோழபுரம் - பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு! - பட்டமளிப்பு விழாவில் மோடி

Prime Minister Narendra Modi: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, பாரதிதாசன் கவிதைகளை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.

PM Narendra Modi speech at Trichy Bharathidasan University convocation ceremony
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 2:18 PM IST

திருச்சி:திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழா, திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் முனையத்தின் திறப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காகவும், பல்வேறு திட்டப்பணிகளைத் துவங்கி வைப்பதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று திருச்சிக்கு வந்தார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கிய பின்னர் பேசிய பிரதமர் மோடி, வணக்கம், எனது மாணவ குடும்பமே என பேசத் துவங்கினார். தொடர்ந்து பேசிய அவர், “பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது எனக்கு சிறப்பு வாய்ந்த ஒன்று. இந்த 2024ஆம் ஆண்டில் இது எனது முதல் பொது நிகழ்ச்சி.

மிக அழகிய மாநிலமான தமிழ்நாட்டில் இளைஞர்கள் மத்தியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் முதல் பிரதமர் நான் என்பதில் பெருமை கொள்கிறேன். இந்த நிகழ்வில் பட்டம் பெறும் மாணவர்களையும், பெற்றோரையும், ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்குவது என்பது ஒரு மிகப்பெரிய செயல்முறை. ஆனால், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கதையே வேறு. 1982இல் இது உருவாக்கப்பட்டபோது, பல கல்லூரிகள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டன. பாரதிதாசன் பல்கலைக்கழகம் வலுவான, மேம்பட்ட முறையில் உருவாக்கப்பட்டதாகும்.

நமது நாடும், கலாச்சாரமும் அறிவை மையமாகக் கொண்டது. நாளந்தா, தட்சஷீலா என்பவை பழங்காலத்தில் இயங்கிய புகழ்பெற்ற கல்வி நிலையங்கள். பண்டைய காலத்தில் காஞ்சிபுரம், மதுரை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகியவையும் கல்வியில் சிறந்து விளங்கியுள்ளது. உலகின் பல பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் இங்கு வந்து கல்வி கற்கின்றனர்.

நாட்டின் வளர்ச்சியில் பல்கலைக்கழகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. 20ஆம் நூற்றாண்டுகளில் காந்தி, பண்டித் மதன் மோகல் மாலவியா, சர்.அண்ணாமலை செட்டியார் ஆகியோர் பல்கலைக்கழகங்களைத் துவங்கினர். பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சாதனை படைத்து வருகிறது. அதேபோல், கல்வியிலும் நமது பல்கலைக்கழகங்கள் உலகளவிலான தரவரிசையில் முக்கிய இடம் வகிக்கின்றன.

உங்கள் பல்கலைக்கழகத்தின் வாசகமான புகழ்பெற்ற பாரதிதாசன் தெரிவித்த, ‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்பதற்கேற்ப இளம் தலைமுறையினர் அத்தகைய நாட்டை உருவாக்கி வருகின்றனர். கரோனா காலத்தில் தடுப்பூசி தயாரிப்பு, சந்திரயான் வெற்றி என அறிவியல், விளையாட்டுத் துறை என ஒவ்வொரு துறையிலும் இளைஞர்களின் சாதனை பெரியது. கற்ற கல்வியும், அறிவியலும் வேளாண்மையை மேம்படுத்த விவசாயிகளுக்கு கை கொடுக்க வேண்டும்.

கற்கும் கல்வி அறிவை வளர்ப்பதோடு சகோதரத்துவம், நல்லிணக்கத்தையும் வளர்க்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் சிறந்து விளங்கினால், நமது நாடும் சிறந்து விளங்கும். கடைசி 10 ஆண்டுகளில் 74 ஆக இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கை, சுமார் 150 ஆக தற்போது உயர்ந்துள்ளது.

துறைமுகங்களில் சரக்கு கையாளும் திறன் இரட்டிப்பு வளர்ச்சி அடைந்துள்ளது. சாலை வசதி கடைசி 10 வருடங்களில் இரட்டிப்பு வளர்ச்சி அடைந்துள்ளது. பதிவு செய்யப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 2014இல் 100ஆக இருந்த நிலையில், இன்று 1 லட்சமாக வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்தியாவை உலக நாடுகள் புதிய நம்பிக்கையோடு பார்க்கிறது. இளம் தலைமுறையினர் நாட்டின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் தேவையான திறன்களை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். பட்டம் பெறுவதுடன் கற்றல் முடிவதில்லை” எனப் பேசிய பிரதமர் மோடி மிக்க நன்றி என தமிழில் தெரிவித்து தனது உரையை முடித்தார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி.. ரூ.19,850 கோடியில் துவங்கி வைக்கும் திட்டப்பணிகள் என்னென்ன..?

ABOUT THE AUTHOR

...view details