திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்டது அமையபுரம். இங்கு, 50 ஆண்டுகளுக்கு மேலாக மானிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இதில் தற்போது 132 மாணவர்கள் பயின்றுவருகின்றனர். மேலும், இடவசதி இல்லாததால் சுமார் நூற்றுக்கணக்கான குழந்தைகள் அருகில் இருக்கும் ஊர்களுக்குச் செல்வதாகவும் கூறப்படுகிறது.
புறம்போக்கு நிலத்தில் ஊர் மக்களால் கட்டப்பட்ட கட்டடம் பழுதாகி இடிக்கப்பட்ட பின் ஊராட்சி நிர்வாக நிதியில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதுவும், சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் கட்டடம் தற்போது மிகவும் சிதிலமடைந்து வருவதாகவும், பள்ளி வாசல் பகுதி, சமையலறை கூடம், திறந்தவெளி வகுப்பறை கூடம் ஆகியவை மிகவும் மாணவர்களுக்கு ஆபத்தான நிலையில் செயல்படுவதாகப் பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பள்ளி அரசுடமை விவகாரம்: மாற்றுச் சான்றிதழை வாங்கிச் செல்லும் பெற்றோர்!
திருச்சி: அமையபுரத்தில் பள்ளியை அரசுடமையாக்க வலியுறுத்தி குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்து மாற்றுச் சான்றிதழ் பெற்றோர் வாங்கிச் செல்கின்றனர்.
நிலம் புறம்போக்காகவும், கட்டடம் ஊராட்சி நிர்வாகமாகவும், பள்ளி நிர்வாகம் தனியாரிடமும் இருப்பதே பள்ளி பராமரிப்பு செய்ய இயலாத காரணமாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், தனியாரிடம் இருக்கும் நிர்வாகத்தை ரத்து செய்து அரசே முழு நிர்வாகத்தை கையகப்படுத்த வேண்டும், சிதிலமடைந்துள்ள கட்டடத்தைச் சீரமைத்து, கூடுதல் கட்டடம் அமைக்க வேண்டும். தொடக்கப்பள்ளியாகச் செயல்படும் பள்ளியைத் தரம் உயர்த்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 2018ஆம் ஆண்டில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட அப்பகுதிகள் பொதுமக்கள், தற்போது அரசுடமையாக்கும் வரை தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை எனக் கூறி, பள்ளி மாற்றுச் சான்றிதழுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.