திருச்சி:திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்குத் தினசரி விமானச் சேவை இயக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஏராளமான பயணிகள் வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் நிலையில் அவர்களில் பலர் அங்கிருந்து மறைமுகமாகத் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.
அந்த வகையில், நேற்று துபாயிலிருந்து கொழும்பு வழியாக வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் பயணி ஒருவர் நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரையும் அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.
அந்த சோதனையில் ஆண் பயணி ஒருவர் செருப்பில் பேஸ்ட் வடிவில் 467 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதன் மதிப்பு ரூ.28 லட்சத்து 30 ஆயிரத்து 954 எனத் தகவல் அளித்துள்ளனர்.