திருச்சி:நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த திருச்சி ஶ்ரீரங்கம் கோயில் கிழக்கு கோபுரம் இடிந்து விழுந்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ள நிலையில், 500 ஆண்டுகளுக்கு முன்பு சுண்ணாம்பு காரை மண்ணால் கட்டப்பட்ட இந்த கோபுரம் குறிப்பிட்ட காலம் மட்டுமே உறுதியாக இருக்கும் எனவும் வெயில் மற்றும் மழையால் சேதம் ஏற்பட்ட நிலையில் இந்த விபத்து நடந்திருப்பதாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
அதிகாரிகளின் விளக்கம்; 108 வைணவ தளங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனவும் அழைக்கப்படும் திருச்சி ஶ்ரீரங்கம் கோயிலில் 21 பெரிய கோபுரங்கள் உள்ளது. பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஶ்ரீரங்கர் தரிசனத்திற்காக வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், பக்தர்கள் கூட்டம் அலைமோதும் இந்த கோயிலின் கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தின் இரண்டாவது அடுக்கு சுவர் நேற்று நள்ளிரவு சுமார் 1.50 மணியளவில் இடிந்து விழுந்து உள்ளது. 500 ஆண்டுகளுக்கு முன்பு சுண்ணாம்பு காரை மண்ணால் கட்டப்பட்ட இந்த கோபுரம் குறிப்பிட்ட காலம் மட்டுமே உறுதியாக இருக்கும் எனவும் வெயில் மற்றும் மழையால் சேதம் ஏற்பட்ட நிலையில் இந்த விபத்து நடந்திருப்பதாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
பொது மக்களின் குற்றச்சாட்டு;இந்த விபத்து பகல் நேரத்தில் நடந்திருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற நிலையில் கோயில் நிர்வாகமும், அதிகாரிகளும் ஏன் இதை இத்தனை நாட்கள் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், இது குறித்து பேசியுள்ள அப்பகுதி மக்கள், கோபுரத்தை சீரமைக்கும் பணிக்காக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு இந்து அறநிலை துறைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் 98 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பழமை மாறாமல் முழுமையாக கோபுரம் சீரமைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருந்ததாக கூறியுள்ளனர்.