திருச்சி: மத்தியப் பேருந்து நிலையம், பால்பண்ணை, காட்டூர், துவாக்குடி, முசிறி, மணப்பாறை பகுதிகளில் உள்ள ஷவர்மா கோழிக்கறி விற்பனை அசைவ கடையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
அப்போது 47 ஷவர்மா கோழிக்கறி விற்பனை செய்யும் கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. காலாவதியான உணவு பொருள்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.
அசைவ உணவுகளை சோதனை செய்து பார்த்தபோது அவை அனைத்தும் கெட்டுப் போனது தெரியவந்தது. இதனை விற்பனைக்கு வைத்திருந்த ஐந்து கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மிகமோசமான அசைவ உணவுகள் இருந்த நான்கு கடைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்ட பிரிவு 56 கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. மேலும் இந்த கடைகளில் இருந்து கெட்டுப்போன 138 கிலோ அசைவ உணவுகள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் சோதனை நடத்திவரும் வேளையில் திருச்சி மாவட்ட ஷவர்மா கோழிக்கறி விற்பனை செய்யும் கடைகளில் சோதனையில் ஈடுபட்டது நுகர்வோரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அன்றைய தினம் விற்பனைக்கு உள்ள அசைவ உணவுகள் உடனடியாக விற்றுவிட வேண்டும், குளிர்சாதன பெட்டியில் வைத்து மறுநாள் விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க :அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு