தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"கவர்னரை தொட்ருவீங்களா?" - சவால் விடும் ஹெச்.ராஜா! - ஆளுநரை பற்றி யாரும் பேச வேண்டாம்

திமுகவினர் இந்த விவகாரத்தை இத்தோடு விட்டு விட்டால், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும்; எனவே ஆளுநரைப் பற்றி யாரும் பேச வேண்டாம் என்று எச்சரிக்கிறேன் என ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 12, 2023, 4:17 PM IST

Updated : Jan 12, 2023, 4:50 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச். ராஜா

திருச்சி: 'நம்ம ஊர் மோடி பொங்கல்' நிகழ்ச்சி திருச்சி பாலக்கரை மண்டல் சார்பாக 30ஆவது வார்டு V.M.பேட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், 'கடந்த மூன்று நாட்களாக பிரிவினைவாத தீய சக்திகள் வேண்டுமென்றே ஆளுநர் மீதும் பாஜக மீதும் தாக்கிப் பேசி வருகின்றன. மறைமுகமாக மத்திய அரசையும் தாக்கி பேசுகின்றனர்.

கடந்த 2019ஆம் ஆண்டில் பார்லிமென்ட் தேர்தலுக்கு முன், எதிர்ப்பான சூழலை ஏற்படுத்தியது போல், இப்போதும் ஏற்படுத்துகின்றனர். ஆளுநரின் நடவடிக்கைகளில் உள்நோக்கமும் இல்லை. மாநில அரசை குறை கூறி, முதலமைச்சருக்கும், அரசுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தாமல், நாகரிகமாக ஆளுநர் உரையில் எழுதியிருக்கும் வாசகங்களை தவிர்த்துள்ளார்.

இதற்கு, முதலமைச்சர், ஆளுநருக்கு நன்றி தெரிவித்திருக்க வேண்டும். ஈ.வெ.ரா., அண்ணா, கருணாநிதி போன்றவர்கள் கொடுத்த உற்சாகத்தில், வெளிநாட்டு நேரடி முதலீட்டில் முதல் மாநிலமாக வந்திருப்பதாக கூறுவது பச்சை பொய். கடந்த ஆண்டு தமிழ்நாட்டுக்கு 2.5 மில்லியன் டாலர் அந்நிய முதலீடு வந்துள்ளது. அதே சமயம், கர்நாடகாவுக்கு 18 மில்லியன் டாலர், மகாராஷ்டிராவில் 11.6 மில்லியன் டாலர் அந்நிய முதலீடுகள் பெறப்பட்டுள்ளன.

ஆளுநர் உரையில் பொய்யை எப்படி படிக்க முடியும். ஆளுநரின் நாகரிகத்தைப் பாராட்ட வேண்டும். கடந்த 7ஆம் தேதியே என்னால், பொய்யான புகழுரைகளைப் படிக்க முடியாது என்று சொல்லியுள்ளார். அப்போது, அரசு தரப்பில், ஆளுநர் உரை அச்சுக்கு போய் விட்டதாக தெரிவித்துள்ளனர். ‘நீங்கள் தவறு என்று நினைப்பதை தவிர்க்கலாம்,’ என்றும் தெரிவித்துள்ளனர். அதனால், மாநில அரசின் சம்மதத்தோடு தான், அந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அதனால் தான் பிரச்னை பெரிதாவதைத் தடுக்க, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுகவினர் ஆளுநரைப் பற்றி பேசக்கூடாது, என்று அறிவுறுத்தியுள்ளார். ஆனால், ஆர்.எஸ். பாரதி போன்ற அநாகரிக பேர் வழிகளுக்கு, அரசியல் சட்டம் தெரிந்திருக்க வேண்டும். 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி தான், ஒரு மாநில அரசை கலைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. குறிப்பிட்ட பகுதியை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர, அரசியல் சட்டத்தில் இடம் உள்ளது.

ஏற்கனவே, அதிமுகவில் இருந்தபோது, கருணாநிதியையும், அவரது குடும்பத்தையும் கேவலமாக சட்டசபையில் பேசிவிட்டு, தற்போது, திமுகவில் அமைச்சராக இருக்கும் சேகர் பாபுவை ஏவி விட்டால், என்னாகும் என்று கேட்கிறார், ஆர்.எஸ். பாரதி. முதலமைச்சர் பதவிக்கு உலை வைக்க முடிவு செய்துவிட்டீர்கள். இப்போது, சேகர் பாபுவின் அரசியல் வாழ்க்கையையும் முடிக்க நினைத்துவிட்டார்கள்.

திமுகவினர் இந்த விவகாரத்தை இத்தோடு விட்டு விட்டால், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும். எனவே, ஆளுநரைப் பற்றி யாரும் பேச வேண்டாம் என்று எச்சரிக்கிறேன். துாண்டுதலால் தான், ஆளுநருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். பார்லிமென்ட் தேர்தலுக்கு முன் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். ஆனால், 303 தொகுதிகளை கைப்பற்றி, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தது’ என்றார்.

இதையும் படிங்க:சேது சமுத்திர திட்டம் தேவை: சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்!

Last Updated : Jan 12, 2023, 4:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details