திருச்சியில் அப்சல் கான் என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை சோதனை திருச்சி: தமிழ்நாட்டில் நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் இல்லத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோன்று தஞ்சை, மதுரை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கும்பகோணம் அருகே திருபுவனத்தில் மதமாற்ற பரப்புரையை தடுத்ததாக கூறி 2019இல் ராமலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். பாமகவில் நகராட்சி அளவிலான நிர்வாகியாக இருந்த இவர், இந்து முன்னணி பிரமுகராகவும் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட ராமலிங்கத்தின் கொலை தொடர்பாக, திருவிடைமருதூர் போலீசார் 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 11 பேரை கைது செய்திருந்தனர்.
இந்த விவகாரம் தமிழ்நாடு அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அரசியல் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் சலசலப்பை ஏற்படுத்தின. கொலையைக் கண்டித்து கடையடைப்பு நடந்ததால் பிரச்னை பெரிதானது. இதனைத் தொடர்ந்து, காவல் துறை விசாரணை நடைபெற்று வந்த நிலையிலேயே 2019ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமைக்கு ராமலிங்கம் கொலை வழக்கு மாற்றப்பட்டது.
இதனிடையே நெல்லை மாவட்டம் தென்காசி செய்யது குருக்கள் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அகமது சாலிக் என்பவரை தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் அதே ஆண்டு ஜீன் மாதம் 27ஆம் தேதி கைது செய்தனர். தொடர்ந்து 2019 ஜூலை 3ஆம் தேதி அன்று தென்காசியில் உள்ள அகமது சாலிக்கின் வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பினர் திடீர் சோதனை நடத்தினர். 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பான விபரங்கள் எதையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.
சோதனை நடந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதோடு, மக்கள் நடமாட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. இதைக் கண்டித்து சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் உடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் தற்போது சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் திருச்சி பீமநகர் பண்டரிநாதபுரம் ஹாஜி முகமது உசேன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் அப்சல் கான் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த கொலை வழக்கு தொடர்பான இரண்டு சாட்சிகளுடன் என்ஐஏ ஆய்வாளர் ரஞ்சித் சிங் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவினர் அப்சல் கானிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அப்சல் கான் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு இந்த வீட்டிற்கு வாடகைக்கு குடி வந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: எஸ்டிபிஐ கட்சி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!