திருச்சி:தமிழ்நாட்டில் இன்று(மே.9) அதிகாலை முதல் சென்னை, கோவை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு பல இடங்களில் ரகசியமாக இயங்குவதாகவும், இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் சதிச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் கிடைத்ததன் பேரில் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சென்னையில் ஓட்டேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளிலும், என்ஐஏ வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திருச்சியிலும் இன்று என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த தஞ்சையை சேர்ந்த முகமது அசாப் என்பவரை, விமான நிலையத்திலேயே என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதேபோல், திருச்சி சிறப்பு முகாமில் மாநகர காவல்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இன்று அதிகாலை முதல் மாநகர காவல்துறை அதிகாரிகள் 150-க்கும் மேற்பட்டோர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். சிறையில் இருக்கும் கைதிகள் மற்றும் வெளிநாட்டு அகதிகள் திருட்டுத்தனமாக செல்போன்கள், மடிக்கணினிகளை பயன்படுத்துவதாக புகார்கள் வந்ததன் அடிப்படையில் சோதனை நடத்தியதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சந்தேகத்திற்கிடமான சில நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளபட்டதாகவும், முகாமில் நடத்திய சோதனையில் 4 செல்போன், 1 மடிக்கணினி, 1 மோடம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: TN NIA Raid: தமிழ்நாட்டில் 10 இடங்களில் என்ஐஏ(NIA) அதிரடி சோதனை!