திருச்சி:தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளுக்கும் இடையே வார்த்தை போர் எழுந்து வருகிறது. இந்நிலையில், தற்போது படத்தில் வரும் போஸ்டர்கள் போல ‘மிகப்பெரிய பொய்யர்’ என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் போஸ்டர் போட்டு விமர்சிக்க, பாஜக பதிலுக்கு உடனடியாக ராகுலின் புகைப்படத்தை ராவணன் போல சித்தரித்து, அதன் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதனை கண்டித்து காங்கிரஸ் தலைவர்கள் தங்களது கடும் கண்டனத்தைப் பதிவிட்டனர்.
இந்நிலையில், இந்த செயலைக் கண்டித்து திருச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, மத்திய அரசுக்கு எதிராக செயல்படும் கட்சிகளை மத்திய அரசின் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்றவற்றின் மூலம் சோதனை நடத்தி அச்சுறுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தியை பத்து தலை ராவணன போல் சித்தரித்து சமூக வலைத்தளத்தில் அவதூறாக விமர்சித்து வரும் பா.ஜ.க மற்றும் பிரதமர் மோடியை கண்டித்து உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் உள்ள குழுமாயி அம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள பா.ஜ.க. மாவட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டனர்.
இதையும் படிங்க: “காவிரி விவகாரத்தில் திமுக-காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது” - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!
ஆனால், அங்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகே நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டு பா.ஜ.கவை கண்டித்தும், பிரதமர் மோடியை கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பினர்.
பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "ராகுல் காந்தி பெயரைக் கூறவே பா.ஜ.கவினர் பயப்படுகிறார்கள். அவரது செல்வாக்கு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வருகிறது. மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
வருகிற 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசின் வெற்றி 2024ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராக பதிவி ஏற்பார். இந்த மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று பல்வேறு கருத்து கணிப்புகள் அறிவித்து வருகிறது.
இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் ராகுல்காந்தி மீது அவதூறு பரப்பி வருகின்றனர். மத்திய அரசுக்கு எதிராக செயல்படும் கட்சிகளை மத்திய அரசின் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்றவற்றின் மூலம் சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வரலாற்றில் முதல் முறையாக 100 பதக்கங்களை வென்ற இந்தியா - பிரதமர் மோடி வாழ்த்து!