திருச்சி: ஸ்ரீரங்கத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், மூலதன மானிய நிதி 2023-2024 இன் கீழ், ரூ.11.50 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை இன்று (டிச.15) நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்குத் தமிழக மட்டுமல்லாது பிற நாடுகள், மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு செய்கின்றனர்.
இத்தகைய உலகப் பிரசித்தி பெற்ற ஶ்ரீ ரங்கம் பகுதியில் சுமார் 1 லட்சத்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், ஸ்ரீ ரங்கத்தில் இதுவரை உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து வரும் பேருந்துகள் மற்றும் சுற்றுலா பேருந்துகளுக்கு என்று தனியாகப் பேருந்து நிலையம் இல்லை. இதனால், ஶ்ரீரங்கத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் சாலையோரங்களில் நிறுத்தப்படுவதால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. மேலும், முறையான போக்குவரத்து வசதியின்றி இருப்பதினால் இங்கு வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்துள்ளனர்.
எனவே, ஸ்ரீரங்கத்தில் உள்ளூர் பேருந்து நிலையம் கட்டப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். மக்கள் கோரிக்கையின் அடிப்படையில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவின் பெயரில், ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.