திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் ஜனவரியில் திறக்கப்படுவது உறுதி - அமைச்சர் கே.என்.நேரு திருச்சி:திருச்சி மாவட்டம், பஞ்சப்பூரில் ரூ. 380 கோடி செலவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ''முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எடமலைப்பட்டி புதூர், அரியமங்கலம், லால்குடி மூன்று இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர். இதில் 33 வகையான நோய்களுக்கு மருந்து கொண்டு வரப்பட்டு மக்களுக்கு தேவையான சிகிச்சை வழங்கபட்டது. 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இதையும் படிங்க :ஏஆர்டி நிறுவன மோசடி: நிறுவனர்களின் பகீர் வாக்குமூலத்தால் அதிர்ச்சி!
மேலும் பஞ்சப்பூரில் 380 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோன்று, மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் பயன்பெறும் விதமாக மார்க்கெட் அமைக்கப்படவுள்ளது. இதற்கான திட்ட அறிக்கையும் தயார் செய்து வருகிறோம். விரைவில் அறிக்கை தயார் செய்யப்படும். மேலும் கரூர் பைபாஸ் ரோடு குடமுருட்டியிலிருந்து, கோரை ஆறு வரை சிமென்ட் சாலை அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அது நிதிக்காக காத்திருக்கிறது.
திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப்பூர் பகுதியில் 10 ஏக்கரில் நிலப்பரப்பில் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐ.டி. பார்க் வரவுள்ளது. மேலும் பஞ்சப்பூரில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சென்னை கத்திப்பாரா மேம்பாலம் போல பட்டர்பிளை மேம்பாலம் அமைக்க உள்ளோம்.
அதுமட்டுமல்லாது 300 கோடி ரூபாய் செலவில் 100 எம்.எல்.டி.சாக்கடை நீரை சுத்திகரித்து மீண்டும் வாய்க்காலில் விடப்படும். திருச்சியில் மெட்ரோ ரயில் பணியை ஆய்வு செய்து இருக்கிறார்கள். திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் 1500 கோடி ரூபாய் செலவில் சாலைகள் அமைக்கும் பணிநடைபெற்று வருகிறது'' இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து திருச்சி மாநகராட்சி நிதியில் இருந்து பஞ்சப்பூர் பேருந்து நிலையம் கட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது என்னும் கேள்விக்கு, ''380 கோடி ரூபாயும் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகராட்சி நிதி பயன்படுத்தவில்லை. நவம்பர் மாதம் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் திறப்பதாக இருந்தது. ஆனால், பணிகள் முடிவடையாத சூழ்நிலையில் ஜனவரி மாதம் கண்டிப்பாக திறக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க :திருப்பூர் பனியன் மார்க்கெட் தீ விபத்து: இழப்பீடு வழங்க வணிகர்கள் கோரிக்கை