தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய கனிமவளத்துறை உதவி இயக்குநர் கைது! - Today Trichy news

திருச்சியில் 3 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கனிமம் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய கனிமவளத்துறை உதவி இயக்குநர் கைது!
ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய கனிமவளத்துறை உதவி இயக்குநர் கைது!

By

Published : Feb 11, 2023, 11:19 AM IST

திருச்சி: திருச்சியை அடுத்த கே.கே.நகரை சேர்ந்தவர், ஆல்பர்ட். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருக்கு, திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் பூலான்சேரி கிராமத்தில் சொந்தமாக நிலம் உள்ளது. எனவே அந்த நிலத்தில் அம்மையப்பா ப்ளூ மெட்டல்ஸ் என்ற பெயரில் கல்குவாரி அமைக்க அனுமதி வேண்டி, கடந்த 2022 ஜூன் 2 அன்று திருச்சி கனிமம் மட்டும் சுரங்கத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

இதனையடுத்து இவரது விண்ணப்பம் முசிறி வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பப்பட்டு கள ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பின்னர் இவரது விண்ணப்பம் மீண்டும் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு வந்துள்ளது. ஆனால், 3 மாதங்கள் ஆகியும் உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து எந்த நடவடிக்கையும் இல்லாமல் இருந்துள்ளது.

இதனால் விண்ணப்பத்தாரரான ஆல்பர்ட், நேரில் சென்று உதவி இயக்குனர் ஸ்ரீதரனிடம் இது குறித்து கேட்டுள்ளார். அதற்கு ஸ்ரீதரன், நேரில் வந்து கள ஆய்வு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதன்படி கடந்த ஜனவரி 7 அன்று நிலம் உள்ள முசிறி பூலாஞ்சேரிக்குச் சென்ற ஸ்ரீதரன், ஆல்பர்ட்டின் இடத்தை ஆய்வு செய்துள்ளார்.

தொடர்ந்து ஆய்வு செய்து முடித்தவுடன், ‘உங்களது ஆவணங்கள் எல்லாம் சரியாக உள்ளது. எனவே எனக்கு நீங்கள் செய்ய வேண்டியதை செய்தால், உங்களுக்கு கல்குவாரி அமைக்க அனுமதி கொடுத்து விடுவேன்’ என ஸ்ரீதரன் கூறியுள்ளார். அதற்கு ஆல்பர்ட், ‘என்ன செய்ய வேண்டும்?’ என கேட்டுள்ளார்.

அதற்கு ஸ்ரீதரன், ‘5 லட்சம் ரூபாய் எனக்கு கொடுத்து விட்டீர்கள் என்றால், உங்களுக்கு பர்மிட் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன். மேலும் இதற்கான முன்பணமாக 3 லட்சம் ரூபாயை வரும் வெள்ளிக்கிழமை எனது அலுவலகத்தில் வந்து கொடுத்து விடுங்கள். அனுமதி அளித்து கொடுத்ததற்கு பிறகு, மீதி 2 லட்சம் ரூபாயை கொடுங்கள்’ என கூறியுள்ளார்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆல்பர்ட், திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வந்து டிஎஸ்பி மணிகண்டனிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறையினரின் அறுவுறுத்தலின்படி, ஆல்பர்ட் நேற்று (பிப்.10) மதியம் திருச்சி உதவி இயக்குனர், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் ஸ்ரீதரனுக்கு 3 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், உதவி இயக்குனர் ஸ்ரீதரனை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் ஸ்ரீதரனின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கீரனூர் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: இன்ஸ்பெக்டர் வீரகாந்தி பணிநீக்கம்!

ABOUT THE AUTHOR

...view details