திருச்சி:பிரதமர் நரேந்திர மோடி திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்.ஐ.டி.) மத்திய அரசு நிதியில் ரூ.41 கோடி மதிப்பீட்டில் 253 அறைகளுடன் 4 மாடியில் கட்டப்பட்ட 506 மாணவர்கள் தங்குவதற்கான விடுதியை திறந்து வைக்க உள்ளார்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெடின் 488 கிலோ மீட்டர் நீளமுள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் 697 கிலோ மீட்டர் நீளமுள்ள பெட்ரோலிய குழாய் திட்டம் ஆகிய இரு திட்டங்களைத் துவங்கி வைக்க உள்ளார்.
கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ரூ.400 கோடியில் உருவாக்கப்பட்ட விரைவு எரிபொருள் மறுசுழற்சி உலையையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். சேலம் - மேக்னசைட் சந்திப்பு - ஓமலூர் - மேட்டூர் அணைப்பிரிவில் 41.4 கிலோமீட்டர் இரட்டை ரயில் பாதை திட்டம், மதுரை - தூத்துக்குடி இடையேயான 160 கி.மீ தூரத்துக்கு இரட்டை ரயில்பாதை அமைக்கும் திட்டம், திருச்சி - மானாமதுரை - விருதுநகர் ரயில்பாதை மின்மயமாக்கல் திட்டம், விருதுநகர் - தென்காசி சந்திப்பு மின்மயமாக்கல் திட்டம், செங்கோட்டை - தென்காசி சந்திப்பு - நெல்லை - திருச்செந்தூர் ரயில்பாதை மின்மயமாக்கல் ஆகிய திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இதேபோல் தேசிய நெடுஞ்சாலை 81-இல் திருச்சி-கல்லகம் பிரிவில் 39 கி.மீ நான்குவழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 81-இல் கல்லகம் - மீன்சுருட்டி பிரிவின் 60 கி.மீ நீளத்துக்கு 4 மற்றும் 2 வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 785-இல் செட்டிக்குளம் - நத்தம் பிரிவின் 29 கி.மீ நான்கு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 536-இல் காரைக்குடி - ராமநாதபுரம் பிரிவில் 80 கி.மீ இருவழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 179ஏ-இல் சேலம் - திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலையில் 44 கி.மீ நீள நான்குவழிச்சாலை ஆகியவற்றையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.