திருச்சி:பொதுத்துறை மற்றும் பாதுகாப்பு துறை நிறுவனங்களைத் தொடர்ந்து எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரைவார்க்கப் போவதாக ஒன்றிய அரசு அறிவித்திருந்த நிலையில், திருச்சியில் திருச்சி மற்றும் தஞ்சை கோட்டங்களை உள்ளடக்கிய தஞ்சை கோட்ட எல்ஐசி ஊழியர் சங்கத் தலைவர் செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “ஐந்து கோடி முதலீட்டில் உருவான எல்ஐசி நிறுவனமானது தற்போது 38 லட்சம் கோடி சொத்துக்களையும், 34கோடி ஆயுள் காப்பீடு நிதியையும் வைத்துள்ளது. தேசத்தின் நலனில் முழுமையும் ஆதிக்கம் செலுத்தும் இந்த நிறுவனத்தின் சொத்துக்கள் தனியார் மயமாக்கும் நடவடிக்கையால் சாமானிய மக்களுக்கு காப்பீடு திட்டம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும்.
தனியார்மயம் என்ற பெயரில் அந்நிய நிறுவனங்கள் படையெடுப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பங்கு விற்பனை என்பது தேசியமயமாக்கப்பட்டதற்கு முற்றிலும் எதிரானது என்பதால் இதனை எதிர்க்கிறோம், அவ்வாறு பங்கு விற்பனையை ஒன்றிய அரசு அமல்படுத்தும்பட்சத்தில் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் எல்ஐசி ஊழியர்கள் ஈடுபடுவார்கள்.