திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் லலிதா ஜுவல்லரி செயல்பட்டு வருகிறது. அதில் கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கடையின் சுவரை ஓட்டை போட்டு இந்த கொள்ளை சம்பவம் நடந்தது தெரிய வந்ததையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சுரேஷ் என்பவர் சிக்கினார். அவரிடம் லலிதா ஜுவல்லரியில் கொள்ளை போன நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து சுரேஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்தில் பிரபல கொள்ளையன் முருகனுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து முருகனை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
இதனிடையே ஏற்கெனவே ஒரு திருட்டு வழக்கில் தொடர்புடைய முருகன், பெங்களூரு நீதிமன்றத்தில் திடீரென சரணடைந்தார். பின்னர் அவரை சிறையில் அடைத்த காவல் துறையினர், கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர். அப்போது, கொள்ளிடம் ஆற்றங்கரையில் லலிதா ஜுவல்லரியில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை புதைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. பெங்களூரு காவல் துறையினர் அவனை அழைத்து வந்து புதைக்கப்பட்ட நகையை மீட்டு, பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர்.
இந்தத் தகவல் திருச்சி காவல் துறையினருக்கு தெரிய வந்ததையடுத்து, பெங்களூரு காவல் துறையினரை பெரம்பலூர் அருகே வழிமறித்து மீட்கப்பட்ட நகைகள் குறித்த விபரங்களை சேகரித்து நீதிமன்றத்தில் தெரியப்படுத்தினர்.