திருச்சி:ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் உபய கோவிலாகவும் சமயபுரம் மாரியம்மனின் தங்கையுமான லால்குடி அன்பில் கிராமத்தில் அமைந்துள்ளது மாரியம்மன் கோவில். இக்கோயிலில் பங்குனி தேரோட்ட விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
பங்குனி தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 26ஆம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அன்று முதல் மாரியம்மன் உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் நலனுக்காகவும் 15 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பார். இந்த நாட்களில் அம்மனுக்கு அரிசி, துள்ளுமாவு, இளநீர் மட்டுமே நெய்வேத்தியம் செய்யப்படுகிறது.
இக்கோவிலில் பங்குனி தேர் திருவிழாவிற்காக கடந்த 2ஆம் தேதி கொடியேற்ற விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 10 நாட்கள் அம்மன் கமலம், சிம்மம், காமதேனு, மயில், ரிஷபம், கண்ணாடி பல்லக்கு, அன்னம் ஆகிய வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்ட விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.