திருச்சி:பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட ராம்ஜிநகர் அடுத்துள்ள நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் இன்று காலை 7.30 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காலதாமதமாக 10:00 மணிக்குத் தான் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது.
நூற்றுக்கணக்கான காளைகளுடன் ஜல்லிக்கட்டு:
போட்டியை ஒன்றிய பெருந்தலைவர் கருப்பையா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டில் 400 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு காளைகள் மாடுபிடி வீரர்களை அருகில் விடாமல் விரட்டியடித்தது. மாடுபிடி வீரர்கள் காளைகளை பிடிக்க முடியாமல் தவித்தனர்.
காளைகளை அடக்க முயன்றபோது பத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் காளைகள் முட்டி தூக்கியதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அரசு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் சைக்கிள், தங்க காசு, வெள்ளி காசு, ப்ரிட்ஜ், குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
பார்வையாளர்கள் போட்டியினை நின்று கண்டுகளிக்க சுற்றிலும் இரும்பிலான கேலரி அமைக்கப்பட்டது. மேலும் மாடுபிடி நடைபெறும் மைதானத்திற்குள் பார்வையாளர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்து விடாதபடி 8அடி உயர இரும்பிலான பாதுகாப்பு அரண்கள் மைதானத்தைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்தன.