தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணப்பாறை மணல் கடத்தல் விவகாரம்: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் - inspector released vehicles in sand smuggling issue suspended and 3 arrested

மணல் கடத்தல் வாகனங்களை விடுவித்ததற்காக காவல் ஆய்வாளர் அன்பழகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள முன்னாள் திமுக ஒன்றிய பொறுப்பாளர் ஆரோக்கியசாமியை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மணல் கடத்தல் விவகாரம்
மணல் கடத்தல் விவகாரம்

By

Published : Jul 16, 2021, 5:02 PM IST

திருச்சி:மணப்பாறை அருகேயுள்ள முத்தபுடையான்பட்டி பகுதியில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கடந்த 14ஆம் தேதி அதிகாலையில் தனிப்படை காவலர்கள் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருட்டுத்தனமாக மணல் கொள்ளையில் ஈடுபட்ட மூன்று பேரைப் பிடித்து, இரண்டு டிப்பர் லாரி ஒரு ஜேசிபி வாகனத்தை பறிமுதல் செய்து மணப்பாறை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விடுவிக்கப்பட்ட மணல் கடத்த ஆசாமிகள்

ஆனால் மணல் கொள்ளையில் ஈடுபட்ட வாகனங்கள் திமுகவின் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆரோக்கியசாமிக்கு சொந்தமானது என்பதால், அரசியல் தலையீடு காரணமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் வாகனத்துடன் சிறிது நேரத்திலேயே மணப்பாறை காவல் துறையினரால் விடுவிக்கப்பட்டனர்.

விஸ்வரூபம் எடுத்த விவகாரம்

எனினும், இச்சம்பவம் சில மணி நேரங்களிலேயே விஸ்வரூபம் எடுத்ததால் பல்வேறு தரப்பிலிருந்தும் காவல் துறையினருக்கு எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து இந்த விவகாரம் டிஜிபி அலுவலகம் வரை சென்றதையடுத்து வாகனங்களைப் பிடித்து வழக்குப் பதிவு செய்ய டிஎஸ்பிக்கு உத்தரவு வந்துள்ளது.

காவலர்களை மிரட்டிய ஆரோக்கியசாமி

இதனைத் தொடர்ந்து ஆரோக்கியசாமியின் வீட்டிற்கு சென்ற டிஎஸ்பி பிருந்தா, இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் இவ்விவகாரம் குறித்து எடுத்துக்கூறி இரண்டு லாரிகள், ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றுடன் ஓட்டுநரையும் ஒப்படைக்கக் கோரி வெகு நேரமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், காவல் ஆய்வாளர் அன்பழகன், காவல்துணை கண்காணிப்பாளர் பிருந்தா இருவரும் ஆரோக்கியசாமி கெஞ்சிக் கதறியுள்ளனர்.

ஆனால், இதற்கெல்லாம் மசியாத ஆரோக்கியசாமி, உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என அவர்களை மிரட்டும் தொனியில் கறாராகப் பேசியுள்ளார்.

கைது செய்யப்பட்ட மணல் கடத்தல் ஆசாமிகள்

பேச்சுவார்த்தை நடத்திய ஸ்ரீரங்கம் எம்எல்ஏ

தொடர்ந்து, இரு தரப்பினருக்குமிடையே ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து ஆள்களை ஒப்படைக்காமல் ஒரு லாரியையும், ஜேசிபி இயந்திரத்தையும் மட்டும் காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

முன்னதாக இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து மணப்பாறை கிழக்கு திமுக ஒன்றிய பொறுப்பாளர் ஆரோக்கியசாமியை, அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று (ஜூலை.15) உத்தரவிட்டார்.

காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

இந்நிலையில், மணல் கடத்தல் வாகனங்களை விடுவித்ததற்காக காவல் ஆய்வாளர் அன்பழகனை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டிஐஜி ராதிகா உத்தரவிட்டுள்ளார்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் அன்பழகன்

தொடர்ந்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரையும் கைது செய்த மணப்பாறை காவல் துறையினர், தலைமறைவாக உள்ள முன்னாள் திமுக ஒன்றிய பொறுப்பாளர் ஆரோக்கியசாமியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:'கோயிலில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்க எவருக்கும் உரிமை இல்லை'

ABOUT THE AUTHOR

...view details