திருச்சியில் 14 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்கோரி மாவட்ட மாநகர காவல் ஆணையரிடம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மனு அளித்தனர்.
அதில் '140 ஆண்டுகள் வரலாறு காணாத வறட்சியை தமிழ்நாடு 2016ஆம் ஆண்டு சந்தித்தது. இதன் காரணமாக தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்கு இன்னும் நஷ்ட ஈடு வழங்கவில்லை. உச்ச நீதிமன்றமே அனைத்து விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறியும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். நகை ஏலம், ஜப்தி நடவடிக்கைகள் நிறுத்திட வேண்டும்.
மேலும், வெங்காயத்தை விவசாயிகளிடம் அரசே நியாயமான விலையில் கொள்முதல் செய்து குறைவான விலையில் மக்களுக்கு கொடுக்க வேண்டும். காவிரியில் வரும் வெள்ள நீரை 30 ஆண்டுகளுக்கு முன்பே மேட்டூர் - அய்யாறு - உப்பாறு இணைப்பு திட்டம் மற்றும் காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு திட்டம் அறிவித்ததை நிறைவேற்ற வேண்டும்.