திருச்சி மக்களவைத் தொகுதியில் வெற்றிச் சான்றிதழை பெற்ற பின்னர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "இந்திய மக்களின் தீர்ப்பை ஏற்பதாக ராகுல்காந்தி, ஸ்டாலின் ஆகியோர் கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் கிடைத்துள்ள மாபெரும் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. திருச்சி மக்களவைத் தொகுதியில் மாபெரும் வெற்றியை மக்கள் அளித்துள்ளனர்.
எனக்கு வாக்காளர்கள் வாக்குகளை அள்ளி கொடுத்துள்ளனர். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் மோடிக்கு எதிரான அலை வீசியுள்ளது. அதனால்தான் தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. நல்ல வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என நினைத்தேன். மூன்று லட்சம் வித்தியாசம் எதிர்பார்த்தேன். ஆனால் 4.60 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்.