திருச்சி மாவட்டத்தில் உள்ளபாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய தொழில்நுட்ப கழகத்தில் நடைபெறும் உலக மகளிர் தின விழாவில் பங்கேற்க தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.
அப்போது தமிழிசை சௌந்தரராஜன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”புதுச்சேரி மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இது மிகவும் பெருமையான விஷயம். இந்த பட்ஜெட்டை பொறுத்தவரை நானும் முதலமைச்சரும் முக்கிய அதிகாரிகளோடு ஒன்றிணைந்து ஆலோசனை செய்து உருவாக்கப்பட்டது. புதுச்சேரி மாநிலம் பல விஷயங்களில் முன்னேறி வருகிறது. அதற்கு இந்த பட்ஜெட் ஒரு முன் உதாரணம். என்னை இரவல் ஆளுநர் என்று சொல்கின்றனர். இந்த இரவல் ஆளுநர்தான் முழு நேர பட்ஜெட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளேன்.
இந்த இரவல் ஆளுநர் தான் மக்களை சந்தித்துள்ளேன், இரவல் ஆளுநர் தான் கரோனா பெருந்தொற்று ஏற்பட்ட காலத்தில் மக்களுக்கு தேவையான மருந்துகளை தெலுங்கானாவில் இருந்து கொண்டு வந்து அளித்துள்ளேன். குறிப்பாக அங்கன்வாடி பயிலும் குழந்தைகளுக்கு மூன்று வேளையும் முட்டைகள் கொடுக்க ஏற்பாடு செய்தேன். இந்த இரவல் ஆளுநர் வேண்டுமா வேண்டாமா என்பதை அவர்கள் முடிவு செய்ய முடியாது. என்னைப் பொறுத்தவரை நான் இரவல் ஆளுநராக பணியாற்ற வில்லை இரக்கம் உள்ள ஆளுநராக பணியாற்றி இருக்கிறேன்.