தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மலைக்கோட்டை நகரில் ஓங்கும் ஈபிஎஸ் ஆதரவு! - முன்னாள் அமைச்சர் பூனாட்சி

திருச்சிக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கும் எப்போதும் ஏதோ ஒரு பந்தம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது... அது என்ன என்பதை இங்கே காண்போம்...

மலைக்கோட்டை நகரமும் அரசியல் நிகழ்வுகளும்!
மலைக்கோட்டை நகரமும் அரசியல் நிகழ்வுகளும்!

By

Published : Jun 20, 2022, 9:33 PM IST

திமுக : திமுகவின் முதல் மாநாடு 1951இல் சென்னையில் நடைபெற்றது. ஆனால், அப்போது தேர்தல்களில் திமுக போட்டியிடவில்லை. 1956ஆம் ஆண்டு மே மாதம் திருச்சியில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாட்டில் தான் தேர்தலில் போட்டியிடலாமா, வேண்டாமா என வாக்கெடுப்பு நடத்தி, தேர்தலிலே நிற்கலாம் என்ற ஜனநாயக ரீதியான முடிவு எடுக்கப்பட்டது. அப்பொழுது, ஒன்றிணைந்த திருச்சி மாவட்டம் குளித்தலையில் இருந்து முதன் முதலாக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிமுக :திமுகவில் இருந்து வெளியில் வந்த எம்ஜிஆர், அதிமுகவைத் தொடங்கி, அதன் 2ஆவது மாநில மாநாட்டை திருச்சியில் நடத்தி திருப்புமுனையை உண்டாக்கினார். ஆட்சியின் நலத்திட்டங்களில் முக்கியமான சத்துணவுத் திட்டத்தையும் திருச்சியில் தான் அவர் தொடங்கி வைத்தார். திருச்சியை 2ஆவது தலைநகரமாக மாற்றப்போவதாகவும் அறிவித்தார்.

திருச்சியில் தொடங்கும் செயல்கள் நல்லபடியாக அமையும் என நம்பிய எம்.ஜி.ஆர், அதனை இரண்டாம் தலைநகரமாகத் மாற்றும் திட்டத்திற்கு வழிவகுத்தார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பினாலும் அரசியல் சூழ்நிலையாலும் இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை. எம்.ஜி.ஆர், தனது வயதான காலத்தில் திருச்சியில் ஒரு வீடு வாங்கி, அதில் விரும்புகிற சமயத்தில் வந்து தங்க வேண்டும் என்று விரும்பினார். அதற்காக குடமுருட்டியில் வாங்கிப்போட்ட 'பங்களா' இன்றும் கேட்பாரற்றுக் கிடக்கிறது.

தமாகா : தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) 1996இல் ஜி. கே. மூப்பனாரால் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு உந்துதலாக இருந்த முக்கியப் பிரமுகர் எல்.அடைக்கலராஜ். இவர்தான் ரஜினிகாந்த் மற்றும் சோவிடம் பேசி அப்படி ஒரு கட்சியை உருவாக்க வழிவகுத்தார் என்ற பேச்சும்பரவலாக உண்டு. அதனால்தான் தேர்தல் சின்னம் மிதிவண்டியை மூப்பனார் எளிதாக பெற்றார் என்பார்கள். 2001இல் இக்கட்சியின் தலைவர் மூப்பனாரின் மறைவுக்குப் பின், அவரது மகன் ஜி. கே. வாசன் தமாகா தலைவரானார். பின்பு 2002இல் தமாகாவை, இந்திய தேசியக் காங்கிரசுடன் இணைத்துவிட்டார் என்றாலும் அது சிறிதுகாலமே நீடித்தது. மீண்டும் தமாகா தனிமரமாக நிற்கிறது.

மதிமுக: 1993ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வைகோ உட்பட சிலர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, திருச்சி வாசவி மஹாலில் கூடி, 'திமுக தங்களுக்கே சொந்தம்' என கருணாநிதியை கட்சியை விட்டு வெளியேற்றத் தீர்மானம் மேற்கொண்டனர். அதற்கு அப்போதைய ஒன்றிணைந்த திருச்சி மாவட்டச் செயலாளர் என்.செல்வராஜ், 26 ஒன்றியச் செயலாளர்கள், மாநகர் மாவட்டச் செயலாளர் மலர் மன்னன், திமுகவின் தலமைக்குழு உறுப்பினர் ஷேக்முகமது உள்ளிட்டவர்கள் பக்கபலமாக இருந்தனர். நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடியாக வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து,‘மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம்’ என்ற புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினர்கள். 1994ஆம் ஆண்டு மே 6ம் நாள், சென்னை, தியாகராய நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்தில் கூடிய பொதுக்குழு, புதிய அமைப்பின் கொடி, கொள்கை, குறிக்கோள்களைத் திட்டமிட்டு வகுத்தார்கள் என்றாலும்; முதல் மாநாடு திருச்சி எடமலைப்பட்டி புதூரில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி திராவிடக் கட்சிகளின் வரலாற்றில் அழியா இடம் பிடித்த திருச்சியில் பல்வேறு சமூகத்தினர் இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி சமூகத்தைச் சேர்ந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்... இருப்பினும் திருச்சியில் எடப்பாடி பழனிசாமி அணியின் கையே ஓங்கி இருக்கிறது. யார் எந்த அணி என்பது குறித்து விவரம் சேகரிக்கையில் ஒற்றைத் தலைமைக்கு எதிராக இருவர் மட்டுமே குரல் கொடுக்கிறார்கள். ஒருவர் 2016-2021இல் அமைச்சராக இருந்த வெல்லமண்டி நடராஜன் மற்றும் முன்னாள் அமைச்சர் பூனாட்சி மட்டுமே...

ஒற்றைத் தலைமை எதிர்ப்பு அணியினர்

முக்கியப் பிரமுகர்களான ப.குமார், சிவபதி, பரஞ்சோதி, கு.ப.கிருஷ்ணன், ரத்தினவேலு, அண்ணாவி, கே.கே.பால சுப்பிரமணியம் ஆகியோர் ஈபிஎஸ் தலைமையில் அணி வகுக்கின்றனர். அதிமுக சட்டவிதிகள் படி பொதுக்குழுவிற்கே அனைத்து அதிகாரங்களும் இருக்கிறது என்கிறார்கள்.

அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா எனத் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு பிறகு எப்படி இரட்டைத் தலைமையை எப்படி கொண்டுவந்தார்களோ, அதேபோல மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கவும் பொதுக்குழுவிற்கு உரிமை உள்ளது என்கிறார்கள். திருச்சியைப் பொறுத்தவரை ஈபிஎஸ் கையே ஓங்கியிருக்கிறது என்பது உண்மை!

திருச்சியில் ஈபிஎஸ் ஆதரவு அணியினர்
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும் - ஓபிஎஸ்க்கு பதிலடி தந்த ஈபிஎஸ் தரப்பு...

ABOUT THE AUTHOR

...view details